யெஸ் வங்கியில் தன் வசம் இருக்கும் 2.2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்வதற்கு எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வருகின்ற மார்ச் இறுதிக்குள் இந்த பங்கு விற்பனை நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் எஸ்பிஐ நிறுவனம் , யெஸ் பேங்கில் தன்வசம் இருக்கக்கூடிய 24 சதவீதம் பங்குகள் அதாவது 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை ஜப்பானில் சேர்ந்த கடன் வழங்குநரான Sumitomo Mitsui Banking Corp மற்றும் துபாயை அடிப்படையாகக் கொண்ட Emirates NBD ஆகிய வங்கிகள் வாங்குவதற்கு போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் Sumitomo Mitsui Banking Corp என்பது ஜப்பானின் இரண்டாவது பெரிய வங்கி ஆகும்.
இந்த இரண்டு நிறுவனங்களுமே யெஸ் வங்கியில் இருந்து 51% பங்குகளை தங்கள் வசம் கொண்டு வர போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் யெஸ் வங்கியின் கட்டுப்பாடு முழுமையாக இந்த நிறுவனங்களுக்கு சென்று விடும். இந்த பங்கு விற்பனைக்கு ஆர்பிஐ தரப்பிலும் வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு யெஸ் வங்கி பெரும் நிதி சிக்கலில் சிக்கியது. இதனை அடுத்து ஆர்பிஐ இந்த விஷயத்தில் தலையிட்டு பல்வேறு வங்கிகளின் உதவியோடு யெஸ் வங்கியை மறுக்கட்டமைப்பு செய்தது.
தற்போதைய சூழலில் எஸ்பிஐ நிறுவனம் இந்த வங்கியில் 24 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்து இருக்கிறது. இது தவிர ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட 11 நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக யெஸ் வங்கியில் 9.74 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.
இரண்டு தனியார் ஈக்விட்டி நிதி நிறுவனங்களும் மொத்தமாக 16 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. மீதமுள்ள பங்குகள் பிற முதலீட்டாளர்கள் வசமும் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது.
இதனிடையே யெஸ் வங்கியில் புரமோட்டர்கள் கணிசமான பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என இதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள ஜப்பான் வங்கி கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து முடிவுகள் எட்டப்படும் பட்சத்தில் இந்த இரண்டு நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றுக்கு எஸ்பிஐ தன் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும். தற்போதைய சூழலில் யெஸ் வங்கியின் ஒரு பங்கு மதிப்பானது 24.60 ரூபாய் என இருக்கிறது. யெஸ் வங்கியின் மதிப்பு 770.95 பில்லியன் ரூபாயாக இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications