கர்நாடகா மாநிலத்தில் எஸ்பிஐ வங்கியின் மேலாளர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கன்னடம் பேச மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ வைரலான நிலையில் அவரை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.
பெங்களூருவுக்கு உட்பட்ட அனேகல் தாலுகாவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் மற்றும் வங்கி மேலாளர் வாக்குவாதம் செய்யக்கூடிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோ பதிவில் அந்த வாடிக்கையாளர் நீங்கள் கர்நாடகாவில் இருக்கிறீர்கள் என்னிடம் கன்னடத்தில் பேசுங்கள் என கூறுவதும் அதற்கு அந்த எஸ்பிஐ வங்கியின் மேலாளர் நான் கண்டிப்பாக கன்னடத்தில் பேசமாட்டேன் இந்தியில் தான் பேசுவேன் என கூறுவதும் இடம்பெற்று இருக்கிறது.

இந்த நிகழ்வு கர்நாடக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னட அமைப்பினர் கூறி வந்தனர். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி அனைத்து வங்கிகளிலுமே மூன்று மொழிகள் கட்டாயம் பயன்பாட்டு மொழிகளாக இருக்க வேண்டும் ஆங்கிலம் இந்தி மற்றும் அந்த மாநிலத்தின் மொழி. குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் தகவல் தொடர்பில் இருக்கக்கூடிய வேலைகளில் எல்லாம் இந்த மூன்று மொழிகளுமே கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த சூழலில் தான் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னடத்தில் பேசமாட்டேன் என குறிப்பிட்டது வைரலானது. இந்த சம்பவம் குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அனேகல் தாலுகா, சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்தியது கடுமையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். அந்த அதிகாரியை பணியிடமாற்றம் செய்ய எஸ்பிஐ எடுத்த விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என சித்தராமையா கூறியுள்ளார். அதேபோல உள்ளூர் மொழியில் பேசுவதற்கு வங்கி ஊழியர்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் கன்னடத்தில் பேச முயற்சிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியை கட்டாயப்படுத்த மத்திய நிதி மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும் என சித்தராமையா தன்னுடைய எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications