டிஜிட்டல் வளர்ச்சிகள் அதிகரித்து வர வர, இணைய குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நிதித்துறையில் சமீப காலங்களாக இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. உடனடியாக கடன் கிடைக்கும் என்ற ஆசையால், நம் மக்களும் இந்த மோசடியில் சிக்கிக் கொள்கின்றனர்.
இது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதோடு ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம்.
ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரித்திருந்தது.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் அதே நேரத்தில் சமீப காலமாக இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடன் தருவதாக ஆன்லைன் ஆப் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வரும் செயலிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும், என்பதற்காக பலதரப்பிலும் இது போன்ற விழிப்புணர்வு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அங்கீகரிக்கப்படாத ஆப்கள்
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேசன்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த கடன் அப்ளிகேசன்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாதவை. இந்த கடன் அப்ளிகேசன்களை பயன்படுத்தும் பொதுமக்களின் செல்போன் தகவல்கள் அனைத்தையும் சேகரித்து அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆக இவர்களிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கேஓய்சி விவரங்கள் கொடுக்க வேண்டாம்
மேலும் பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், ஆதார் மற்றும் தனது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை இது போன்ற கடன் ஆப்களில் கொடுக்க வேண்டாம். அதோடு இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத கடன் ஆப் துறையினரிடம் இருந்து மிரட்டல், அச்சுறுத்தல் ஏதேனும் வந்தால் உடனே போலீசில் புகார் கொடுக்க வேண்டும், அதோடு நீங்கள் கடனுக்கு விண்ணபிக்கும் போது, கடன் ஆஃப்களின் உண்மைத்தன்மை பற்றி ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

எஸ்பிஐ என்ன கூறியது?
இது குறித்து எஸ்பிஐ தரப்பிலும், ஒரு ஆப்பினை பதிவிறக்கம் செய்யும் போது அது ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற்றதா? என்று பார்த்து டவுன்லோடு செய்ய வேண்டும். அதோடு ஆஃப்கள் வழங்கும் சலுகைகள் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்குகிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் யாரும் உங்களது கே ஓய்சி விவரங்களை பதிவு செய்யாத எந்த நிதி நிறுவனங்களிடமும் பகிர வேண்டாம் என கூறியுள்ளது.