இந்திய ஐடி துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிகவும் முக்கிய காரணமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரும், 2011- 2014 வரையிலான காலக்கட்டத்தில் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த எஸ்டி ஷிபுலால் டெக் தொழிலதிபராக மட்டும் அல்லாமல் மாபெரும் ரியல் எஸ்டேட் ஜாம்பவான் ஆகவும் உள்ளார்.
அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் முன்னணி டெக் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் குடியிருந்தாலும், இந்நிறுவனத்தின் ஊழியர்கள் குடியிருப்பது என்னவோ இன்போசிஸ் ஷிபுலால் வீட்டில் தான்.

டெக் தொழிலதிபராக இருக்கும் ஷிபுலால் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போதே ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான முதலீட்டை செய்ய துவங்கினார். இதன் மூலம் தற்போதும் அமெரிக்காவில் பெரும்பாலான டெக் வல்லுனர்கள் நிறைந்திருக்கும் சியாட்டில் பகுதியில் மட்டுமே சுமார் 700 அப்பார்ட்மென்ட்களை இன்போசிஸ் ஷிபுலால் வைத்துள்ளார்.
இந்த அனைத்து வீடுகளும் ஷிபுலால் அவர்களின் குடும்ப நிறுவனமான இன்னோவேஷன்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் இந்தியா கட்டுப்பாடில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 700 அப்பார்ட்மென்ட் வீடுகள் சியாட்டில் மற்றும் பெல்லூவ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள் பெரும்பகுதியினர் மைக்ரோசாப்ட், அமேசான், ஸ்டார்பக்ஸ், போயிங் போன்ற முன்னணி நிறுவனங்களின் நடுத்தர மற்றும் உயர் அதிகாரிகள் ஆவர்.
ஷிபுலால் அவர்களின் குடும்ப நிறுவனமான இன்னோவேஷன்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் இந்தியா-வின் 50 சதவீத முதலீடுகள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தது. அமெரிக்காவில் 700 வீடுகள் மட்டும் அல்லாமல் ஜெர்மனி நாட்டின் பெர்லின், பிராங்க்ஃப்ரூட் பகுதியில் சில அப்பார்ட்மென்ட்கள் வாங்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் வீடுகளின் மதிப்பு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டை பெற்று இருக்கும் என கணிக்கப்படும் வேளையில் இன்னோவேஷன்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் இந்தியா-வின் தலைவராகவும், இந்நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பல்வேறு நிறுவனத்தின் தலைவராகவும் இருப்பது தமிழரான என்.செந்தில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐஐஎம் பெங்களூர் மற்றும் பிட்ஸ் பிலானி கல்லூரியில் பட்டம் பெற்றவர் 2005 முதல் இவர் இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

எஸ்டி ஷிபுலால் தான் இப்படி என்றால் இவருடைய மகள் ஸ்ருதி ஷிபுலால் இவரை போலவே கொலம்பியா பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்ற அவர் தற்போது Tamara என்னும் நிறுவனத்தின் கீழ் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலத்தில் காஃபி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை சாகுபடி செய்கிறார்.
இது மட்டும் அல்லாமல் பெங்களூரில் மிகவும் ஆடம்பர பகுதியான யூபி சிட்டியில் Caperberry மற்றும் Fava என்ற இரு ஆடம்பர ரெஸ்டாரென்ட்-களை நடத்தி வந்தார். மேலும் திருவனந்தபுரம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் ஹோட்டல்களையும் வைத்துள்ளார். தற்போது TAMARA, LILAC ஆகிய பெயரில் ஹோட்டல்கள் இயங்கி வருகிறது.
மேலும் ஷிபுலால் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட 2 சதவீதம் அளவிலான இன்போசிஸ் பங்குகளையும் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications