சென்னை: முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (SEBI) தேசிய பத்திர சந்தை நிறுவனத்துடன் (NISM) இணைந்து முதலீட்டாளர்களுக்கான இலவச தேர்வை நடத்தி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சியின் மூலம், முதலீட்டாளர்கள் தங்களின் பங்குச் சந்தை அறிவை சோதித்துக் கொள்ளவும், முதலீட்டு உலகத்தை ஆழமாக புரிந்துகொள்ளவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 11 அன்று வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் முதலீட்டாளர்களின் தேர்வு குறித்து செபி கூறியுள்ளது. இந்த முயற்சி முதலீட்டாளர்களுக்கு சந்தைகள் மற்றும் முதலீடுகள் பற்றிய அறிவை சோதிக்க உதவும் சான்றிதழாகும். இந்திய பத்திர சந்தையில் முதலீடு செய்வது குறித்த விரிவான அறிவைப் பெற விரும்பும் தனிநபர்களுக்கு பெரிதும் உதவுவதற்காக, இந்த சர்டிபிகேஷன் ப்ரோக்ராம் நடத்தப்பட உள்ளது என்று கூறியுள்ளது.

இந்த சர்டிபிகேட் ப்ரோக்ராமில் கலந்து கொள்வதற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பரீட்சை எழுதலாம். அதற்கான கோர்ஸ் விவரங்கள், எப்படிப் பதிவு செய்வது மற்றும் சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்வதற்கான ஹெல்ப்லைன் investor.sebi.gov.in அல்லது https://www.nism.ac.in/sebi-investor-certification-examination/ இல் கிடைக்கும்.
இந்த முதலீட்டாளர்களுக்கான சான்றிதழ் தேர்வு, பத்திர சந்தையின் டிஜிட்டல் நிதி சார்ந்த கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்று செபியின் முழு நேர உறுப்பினர் அனந்த நாராயண் அறிமுக விழாவில் பேசினார்.
இந்த ஆன்லைன் தேர்வு, முதலீட்டாளர்களின் முதலீட்டு செயல்முறை மற்றும் பத்திர சந்தையில் உள்ள ஆபத்துகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும் தேர்வின் முக்கிய நோக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. அடிப்படை நிதி சார்ந்த விஷயங்களைப் பற்றிய அறிவை வளர்த்தல். இதில் சேமிப்பு, முதலீடு, பட்ஜெட் திட்டமிடல், பணவீக்கம் போன்றவை அடங்கும்.
2. இந்தத் தேர்வின் மூலம் பல்வேறு அரசாங்க திட்டங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும்.
3. முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகள் உட்பட பத்திர சந்தைகளின் கட்டமைப்பு பற்றிய புரிதல்.
4. பங்குச் சந்தைகள், வைப்புத்தொகைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ரோல் என்ன.. என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
5. கிரெடிட் ரிஸ்க், மார்க்கெட் ரிஸ்க் மற்றும் லிக்விடிட்டி ரிஸ்க் போன்ற முதலீட்டுடன் தொடர்புடைய அபாயங்களைப் பற்றி அறிய உதவும்.
6. முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள், தேவைகள் மற்றும் புகார்களுக்கான தீர்வு முறைகள் பற்றிய அறிமுகம் கிடைக்கும்.
இது போன்ற தேர்வுகளின் மூலம், எந்தெந்த திட்டங்களில் குறிப்பிட்டு முதலீடு செய்ய வேண்டும் என்றும், ஆபத்து நிறைந்த முதலீடுகள் பற்றிய அறிவை வளர்க்கவும், இளம் முதலீட்டாளர்கள் முதல் நீண்ட நாட்களாக முதலீடுகளில் ஈடுபடுபவர்கள் வரை அனைவருக்கும் இது போன்ற தேர்வுகள் உதவிகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications