இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் மக்களை பயமுறுத்தி வந்தது எனில், மறுபுறம் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில் பணவீக்க விகிதமும் உச்சத்தினை தொட்டுள்ளது.
இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தான் சில விவசாய பொருட்களை, செபி ஒரு வருடத்திற்கு ப்யூச்சர் டிரேடிங் வர்த்தகத்தில் நிறுத்தி வைத்துள்ளது.
அதெல்லாம் சரி, இதனால் என்ன பிரச்சனை? எதனால் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பலன் என்ன? இதனால் சாமனியர்களுக்கு என்ன பலன். எதற்காக இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஏன் 1 வருடத்திற்கு மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
கமாடிட்டி ப்யூச்சர் சந்தையில் தடை
பாசுமதி அல்லாத அரிசி, கோதுமை, சனா, கடுகு, சோயாபீன்ஸ், குரூடு பால்ம் ஆயில், உளுந்து உள்ளிட்ட பொருட்களை, உடனடியாக ப்யூச்சர் வர்த்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செபி அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது குறித்து செபி ஏற்கனவே ஆகஸ்ட் 16, 2021, அக்டோபர் 08,2021 தேதியிட்ட அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.
விற்று கொள்ளலாம், இனி வாங்க முடியாது
மேலும் நடப்பு கான்ட்ராக்டில் புதிய ஆர்டர்கள் எதையும் எடுத்துக் கொள்ள கூடாது. இருக்கும் ஆர்டர்களை விற்று விட்டு வெளியேற மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தடையானது 1 வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்ந்து சந்தையில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம்
குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் சில்லறை மற்றும் நுகர்வோர் விலை குறியீடானது, மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.91% அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
மொத்த விலை பணவீக்கம் என்பது நவம்பர் மாதத்தில் 14.23% ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக அக்டோபர் மாதத்தில் 12.54% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து 8 மாதங்களாகவே இரட்டை இலக்கில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் எப்போது?
செபியின் இந்த நடவடிக்கையானது, மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வரும் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக 1 வருடம் என்பது கூறப்பட்டாலும், செபியின் அறிவிப்பு வரும் வரையில் மீண்டும் ப்யூச்சர் சந்தையில் இந்த கமாடிட்டி பொருட்கள் வர்த்தகமாகாது என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு எவ்வளவு?
நாட்டில் தொடர்ந்து பருவம் தவறி பெய்த மழையால் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியானது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆக இதனால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விலை அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களாக சற்று விலை குறைந்திருந்தாலும், முந்தைய ஆண்டுகளை காட்டிலும் விலை அதிகம் தான் என்பது நினைவு கூறத்தக்கது.
பலன் என்ன?
பொதுவாக ஒரு பொருட்களுக்கான தேவை, சப்ளை, உற்பத்தி, இருப்பு இவற்றின் அடிப்படையில் தான் ப்யூச்சர் வர்த்தகம் விலை ஏற்ற இறக்கத்தினை காணும். ஆக தற்போதுள்ள நிலையில் இவற்றில் அதிகளவில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். இதன் காரணமாக இந்த தடை வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications