இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி பங்குச்சந்தையில் இருந்து மூன்று தனி நபர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. யூடியூப் சேனலில் வீடியோக்கள் வழியாக முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் மணிஷ்மிஸ்ரா, விவேக் சவுகான் மற்றும் அங்குர் சர்மா ஆகிய மூன்று பேருக்கும் செபி இந்த தடையை விதித்துள்ளது.
அட்லாண்டா லிமிடெட் என்ற நிறுவனத்தின் பங்கு குறித்து தவறான தகவல்களை யூடியூப் வீடியோக்கள் வாயிலாக வெளியிட்டதாக செபி இந்த மூன்று பேர் மீதும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. இவர்களில் மணிஷ் மிஸ்ராவுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விவேக் சவுகான் மற்றும் அன்குர் சர்மா ஆகிய இருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மிஸ்ரா மற்றும் சர்மா இருவரும் சட்டத்துக்கு புறம்பாக இந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்தி அதன் மூலம் கண்ட லாபத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் செபி வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக வீடியோ வெளியிட்டதன் மூலம் மிஸ்ரா 4.37 லட்சம் மற்றும் அங்குர் சர்மா 6.1 லட்சம் ரூபாயையும் வருமானமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகையை இவர்கள் இருவரும் அடுத்த நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிதியத்தில் டெபாசிட் செய்ய வேண்டுமென செபி வெளியிட்டு இருக்கும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செபி நடத்திய விசாரணையில் மிஸ்ரா என்பவர் மிட்கேப் கால்ஸ் மற்றும் பிராஃபிட் யாத்திரா என்ற பெயரில் இரண்டு யூடியூப் சேனல்களை நடத்தி வந்துள்ளார். இந்த சேனல்கள் வாயிலாக அட்லாண்டா நிறுவனம் குறித்து தவறான மற்றும் போலியான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவருக்கு விவேக் சவுகான் மற்றும் அங்குர் சர்மா ஆகிய இருவர் உதவியாக இருந்திருக்கின்றனர். இந்த மூன்று பேரின் நோக்கமும் மக்களிடம் அட்லாண்டா நிறுவனம் குறித்த போலியான தகவல்களை சேர்த்து அவர்களை பங்கினை வாங்க செய்து இந்த பங்கின் மதிப்பை உயரச் செய்வது என்பது தெரிய வந்திருக்கிறது.
முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் மூன்று பேரும் செயல்பட்டனர் என செபி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இவர்களில் மணிஷ் மிஸ்ரா மற்றும் சவுகான் ஆகிய இருவரும் ஏற்கனவே இதே போல ஒரு நிறுவனம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக விசாரணைக்கு ஆளானவர்கள். தேசிய பங்குச்சந்தை சார்பாக வழங்கிய புகாரின் பேரில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 23ஆம் தேதி வரையில் அட்லாண்டா நிறுவன பங்கு வர்த்தகத்தை ஆய்வு செய்து பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செபி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications