அமெரிக்க நீதித்துறை, FBI, SEC அமைப்புகளின் சமீபத்திய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்தவர்களும் புலம்பி வரும் வேளையில், நவம்பர் 20ஆம் தேதி வெடித்த பிரச்சனைக்கு வெள்ளிக்கிழமை மாலை இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, அதானி குழுமம் அனைத்து விதமான தகவல்களையும் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
SEBI-யின் இந்த நடவடிக்கை சந்தை விதிமுறைகள் சரியாக பின்பற்றுகிறதா (Listing Obligation and Disclosure Requirements -LODR) என்பதை உறுதி செய்வதற்கான அதன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் துவங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. செபியின் உத்தரவின் பெயரில் பங்குச்சந்தைகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகள் பல்வேறு அதானி குழும நிறுவனங்களுக்கு முக்கியமான கேள்விகளைத் தொகுத்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கில் குறிப்பிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விபரங்களை முறையாகப் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா என்பதற்கான விளக்கத்தைக் கோரியுள்ளன.
கௌதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பங்குச்சந்தைக்குத் தகவல் வெளியிடுவதில் ஏதேனும் தாமதம் அல்லது தவறு இருந்ததா என்பது குறித்து பங்குச்சந்தை ஆய்வு செய்ய உள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி அமெரிக்க நீதித்துறையின் வழக்கிற்குப் பின்பு SEBI அதானி குழுமத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதேவேளையில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ விசாரணையும் தொடங்கப்படவில்லை.
தற்போதைய நடவடிக்கைகள் மூலம் அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நேர்மையாக இருப்பதை உறுதி செய்வதற்கான SEBI-யின் வழக்கமான கண்காணிப்பு செயல்முறை தான் இது. இதனால் எவ்விதமான புதிய விசாரணை துவங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அதானி குழுமம் தகவல்களைப் பங்குச்சந்தைக்குத் தெரிவிப்பதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SEBI நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது அல்லது அதிகாரப்பூர்வ விசாரணைகளைத் தொடங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.


Click it and Unblock the Notifications