மும்பை: அதானி குழுமத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க 6 மாத கால அவகாசம் கேட்டுள்ளது இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டாளர் செபி.
அதானி குழுமத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வெளிநாடுகளில் அதிக பண முதலீடு செய்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சட்டவிரோத பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத் தொடர் முழுவதும் அமளி ஏற்பட்டது. அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அந்த கூட்டத் தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமத்தில் ரூ 20 ஆயிரம் கோடியை யார் முதலீடு செய்தது உள்ளிட்ட பல கேள்விகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுப்பினார். இதையடுத்து அவர் வேறு ஒரு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று அவரது எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் நண்பர் அதானி என்பதை விளக்கும் வகையில் மோதானி என எதிர்க்கட்சியினர் முழங்கினர். இப்படி பல்வேறு புயல்களை எழுப்பிய அதானி விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அதானி மீதான புகார்களை விசாரிக்க மார்ச் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை குழு அமைத்தது.
அதே உத்தரவில் அதானி குறித்து விசாரணை நடத்தி மே 2 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அதானி மீதான புகார்களை விசாரிக்க இன்னும் 6 மாதங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் செபி கால அவகாசம் கேட்டுள்ளது.
அதானி குழுமத்தின் சந்தேகததிற்குரிய 12 பரிவர்த்தனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கின்றன. இந்த பரிவர்த்தனைகளின் கீழ் பல்வேறு துணை பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் இவற்றை விசாரிக்க பல்வேறு தகவல்களை சேகரிக்க வேண்டும் என செபி தெரிவித்துள்ளது.
இதனால் அதானி விவகாரத்தை விசாரிக்க இன்னும் 6 மாதங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் செபி அவகாசம் கேட்டுள்ளது. எனினும் அதானி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications