சென்னை: இந்தியாவில் தற்போது செமி கண்டக்டர் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்எல்பி சர்வீசஸ் என்ற நிறுவனம், பல்வேறு நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது செமி கண்டக்டர் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக செமி கண்டக்டர் ஃபேப்ரிகேஷன் (semiconductor fabrication) பிரிவில் மூன்று லட்சம் வேலை வாய்ப்புகளும் செமி கண்டக்டர் Assembly, Testing, Marking, Packaging பிரிவில் 2 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகி இருப்பதாக அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
மத்திய அரசும் தற்போது செமி கண்டக்டர் சார்ந்த தொழில்களுக்கு வேகமாக அனுமதி வழங்கி வருகிறது. அண்மையில் கூட உத்திர பிரதேச மாநில அரசு 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமி கண்டக்டர் திட்டத்திற்கு அனுமதி தந்தது. மேற்குவங்க மாநில அரசும் செமி கண்டக்டர் பாலிசியை விரைவில் கொண்டுவர இருக்கிறது.
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் டாடா மற்றும் சில நிறுவனங்கள் தங்களுடைய செமி கண்டக்டர் ஆலைகளை அமைக்க தொடங்கிவிட்டன. இந்தியாவில் இந்த துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
குறிப்பாக Process Integration Engineer, Semiconductor Wafer Inspector, Technical Specialist, Preventative Maintenance (PM) Technician, Design Engineer, Process Engineer, Quality Control Specialis ஆகிய வேலைகளுக்கு ஆட்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்களாம்.
தற்போது செவி கண்டக்டர் துறை வளர்ச்சி அடைந்து வரும் வேகத்தில் இந்தியாவில் அதற்கு நிகரான திறன் கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அது சார்ந்த படிப்புகளில் திறன்களை வளர்த்துக் கொண்டால் இந்த துறையில் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என என்எல்பி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சச்சின் அலுக் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்குள் இந்த துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் இந்தியா செமி கண்டக்டர் உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்றால் இந்த பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் திறன்மிகு பணியாளர்களை உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் செமி கண்டக்டர்கள் விற்பனை 2024 ஆம் ஆண்டில் 588 பில்லியன் ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகமாகும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications