டெல்லி: மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜீவ் கௌபா அண்மையில் பணி நிறைவு பெற்றார். அந்தப் பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்த பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் பணி நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை செயலாளராக பதவி வகித்தவர். இது தொடர்பாக மத்திய அரசின் பணி நியமன குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆணையில் “தற்போது முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் செயலாளராகவும் இருக்கக்கூடிய ஸ்ரீ துஹின் காந்த பாண்டே, இனி நிதித்துறை செயலாளராக செயல்படுவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

துஹின் காந்த பாண்டே ஏர் இந்தியா நிறுவனம் அரசிடமிருந்து மீண்டும் டாடா நிறுவனத்தின் விற்பனை செய்யப்பட்டது மற்றும் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியீடு செய்து பட்டியலிடப்பட்டது என்பன உள்ளிட்ட செயல்பாடுகளின் பின்னணியில் இருந்தவர். முன்னதாக 2019ஆம் ஆண்டு தான் அனில் குமார் காச்சிக்கு பதிலாக பாண்டே இந்த துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்தியாவில் நிதித்துறை செயலாளர் பொறுப்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பொறுப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நிதித்துறை செயலாளர்தான் நிதி அமைச்சகத்தின் நிர்வாக தலைவராக செயல்படுகிறார். பொதுவாக இந்த பதவிக்கு செயலாளர்கள் பதவியில் இருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 22 இன் கீழ் நிதி செயலாளர் தான் ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடும் நபராக இருக்கிறார். நிதி கொள்கை மற்றும் நிர்வாகம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் நிதி அமைச்சருக்கான முதன்மை ஆலோசகராக இவர் தான் செயல்படுவார்.
நிதி அமைச்சகத்தின் ஐந்து துறைகளிலும் இவர்தான் மிக மூத்த செயலாளராக இருப்பார். நிதி அமைச்சகத்துக்கு உட்பட்ட பொருளாதார விவகாரங்கள், செலவினங்கள், நிதி சேவைகள் ,வருவாய் மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மை ஆகிய ஐந்துக்குமான மூத்த செயலாளராக இவரே செயல்படுவார். இந்த பதவிக்கு மாதத்திற்கு 2. 25 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications