வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது சிங்கப்பூர் அலுவலகத்தை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஒவை மேற்கொள்ளும் நோக்கில் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
செலவுகள்
இந்த சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தின் மாதாந்திர பண செலவினத்தை கணிசமாக குறைக்குமாறு நிறுவனத்தின் தலைமைக்கு அறிவுறுத்தியது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக மாதந்தோறும் கிட்டத்தட்ட 4 கோடி டாலர் செலவிடப்படுகிறது. இந்த செலவினத்தை சுமார் 2 கோடி டாலராக குறைக்குமாறு தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்.

செலவினத்தை குறைப்பதன் மூலம் பிளிப்கார்ட் அதன் ஐபிஓவுக்கு முன்னதாக நிதி ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்நிலையில், ஐபிஓ அழுத்தம் தீவிரமடைந்ததால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் 4 பேர் நிறுவனத்திலிருந்து வெளியேறி உள்ளனர்.
துணை தலைவர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் மளிகை மற்றும் பெரிய விநியோக சங்கிலியின் தலைவரும், மூத்த துணை தலைவருமான அங்கித் ஜெயின், மனிதவளத் துறையின் துணை தலைவர் பிரஜக்தா கனக்லேகர், பகுப்பாய்வு தலைவர் மற்றும் துணை தலைவர் அனுராக் சிங்வி மற்றும் பிளிப்கார்டின் துணை தலைவர் மற்றும் துணை நிறுவனமான கிளியர்ட்ரிப்பில் தலைமை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றிய கணேஷ் ராமசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களில் அனுராக் சிங்வி, பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 13 ஆண்டுகளாக பணியாற்றியவர். ஜெயின் ராமசாமி மற்றும் கனக்லேகர் ஆகியோர் சுமார் 6 ஆண்டுகளில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய அங்கித் ஜெயின், விரைவு வர்த்தக துறையில் பிளிப்கார்ட்டின் போட்டி நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் ஹெல்த்
தற்போது 4 மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதால், நிறுவனத்தின் செலவினம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் தனது மருந்து பிரிவான பிளிப்கார்ட் ஹெல்த்தை மூடியது. மேலும் மற்ற முக்கியமற்ற பகுதிகளை குறைத்து வருகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் மாதாந்திர செலவு அதிகமாக இருந்தாலும், அதன் அளவு போட்டியாளர்களை விட மிகப்பெரியது.
2023-24ம் நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணைய வருவாய் 21 சதவீதம் உயர்ந்து ரூ.17,907.3 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இழப்புகள் 41 சதவீதம் குறைந்து ரூ.2,358 கோடியாக உள்ளது. அதிக விளம்பர வருமானம் இழப்புகளை குறைக்க உதவியது.


Click it and Unblock the Notifications