ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வாரத்தின் முதல் நாளே மோசமான ஒரு நாளாக அமைந்திருக்கிறது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்து இருக்கின்றன. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பங்குச்சந்தைகள் சரிவடைந்து பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சிவப்பு நிறத்திலேயே காட்சி தந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து சில நொடிகளில் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி தந்தது.

சென்செக்ஸ் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து 74,328 புள்ளிகள் என வர்த்தகமானது அதேவேளையில் நிஃப்டி 50 குறைந்து 23,358 புள்ளிகள் என வீழ்ச்சி கண்டது. பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். பங்கு சந்தையின் இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
கடந்த பல மாதங்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றமே அடையவில்லை இனிவரும் நாட்களிலாவது மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்திய பங்குச் சந்தைகள் மிக மோசமாகவே செயல்பட்டு வருகின்றன. ஈரான் போர் விவகாரம் இன்னும் இந்திய பங்குச்சந்தையை மோசமான நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.
பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன அதில் முதல் காரணம் இரண்டு வாரங்களில் இல்லாத அளவாக பிரெண்ட் கச்சா எண்ணெய் உயர்ந்தது தான். ஒரு பேரல் 112 டாலர் என உச்ச விலையை எட்டி இருக்கிறது. அதேபோல இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.17 ரூபாய் என வர்த்தகமாகிறது. அதாவது 96 ரூபாயை கடந்துவிட்டது. ஒரு அமெரிக்க டாலரை வாங்க இந்தியா 96 .17 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலை உண்டாகி இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது இதனால் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து தங்களுடைய முதலீட்டை வெளியேற்றிய வண்ணம் இருக்கின்றனர். இது இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் கூடுதல் விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டியிருக்கும். கைவசம் இருக்கக்கூடிய டாலரின் அளவு குறைய வாய்ப்புள்ளது, இப்படி பல்வேறு எதிர்மறையான விஷயங்கள் நடக்கின்றன இதனால் மீண்டும் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் அதை ஒட்டி பல்வேறு பொருட்களின் விலைவாசிகள் உயர்வதற்கான வாய்ப்பு உண்டாகி இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

