2014ல் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன். அவருக்கும், மோடி அரசுக்கும் மோதல் போக்கு நிலவியது. ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிந்தபிறகு 2016ல் அடுத்த கவர்னராக உர்ஜித் படேல் பொறுப்பேற்றார்.
ஆரம்பத்தில் அவருக்கும் மத்திய நிதியமைச்சகத்துக்கும் சுமூகமாக உறவு நிலவியது போல் இருந்தது. உர்ஜித் படேல் கவர்னராக பதவியேற்ற இரண்டாவது மாதத்தில் பணமதிப்பு நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரெப்போ ரேட் உள்ளிட்ட விவகாரங்களில் அவருக்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 2018 டிசம்பரில் தனது பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து 2 கவர்னர்களுடன் கசப்பான அல்லது மோதலை சந்தித்ததால், புதிய கவர்னர் அரசுக்கு சாதகமான நபராக இருக்கும் வேண்டும் மத்திய அரசு விரும்பியது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், மத்திய பொருளாதார விவகாரத் துறையின் முன்னாள் செயலாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சக்தி காந்த தாஸை ரிசர்வ் வங்கி கவர்னராக மோடி அரசு நியமனம் செய்தது.
2018 டிசம்பரில் கவர்னராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்றார். தனது முன்னோடிகளை போலல்லாமல், ஒரு அமைதியான கவர்னராக இருந்தார், பதில் பேசுவதை காட்டிலும் அமைதியாக வேலை செய்வதை விரும்பினார். 2021ல் அவரது பதவிக் காலத்தை மத்திய அரசு மேலும் 3 ஆண்டுகள் நீடித்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த 5 ஆண்டுகளும் அவருக்கு கடுமையான சவால் நிறைந்ததாக இருந்தது. கொரோனா பரவலால் பொருளாதாரம் முடக்கம், சிறிய வங்கிகளில் நிர்வாக சிக்கல்கள், பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது, வாராக்கடன் விவகாரம் போன்ற கடும் சவால்களை அமைதியாக எதிர்கொண்டு திறம்பட நிர்வகித்தார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த பல்வேறு கடன் உதவி திட்டங்கள் தொழில்துறை மறுவாழ்வு பெற பெரிய உதவியாக இருந்தது. மேலும் மத்திய அரசாங்கம் செய்ய நினைத்த திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி மூலம் சரியான முறையில் ஆதரவு தந்தார். இதனால் இந்திய பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியில் இருந்து தப்பியது.
சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியை மென்மையான அணுகுமுறையின் மூலம் வழிநடத்தி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு மாற்றாக மற்றொரு நாட்டை தேடும் நேரத்தில் மிகவும் விரும்பப்படும் இடமாக நாட்டை வைத்திருப்பதில் உதவினார். இவர் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு, ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு பிரச்சினையும் நடக்கவில்லை.
கடந்த நவம்பரில் சில்லறை விலை பணவீக்கம் 5.5 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 49 மாதமாக சில்லறை விலை பணவீக்கத்தின் நடுத்தர கால இலக்கான 4 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. எனவே வரும் மாதங்களில் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது பெரும் சவாலான பணியாக இருக்கும்.
வேகமாக வளர்ந்து வரும் வங்கி அமைப்பை நிர்வகிப்பது சக்தி காந்த தாஸ் மற்றும் அவரது சக பணியாளர்களுக்கு நிச்சயம் கடுமையான பணியாக இருக்கும். தொடர்ந்து அரங்கேறும் மோசடி நிகழ்வுகள் மற்றும் கடன்பெற்றவரின் துயரத்திற்கு வழிவகுத்த கடன் மீட்பு செயல்முறையில் உள்ள நிர்வாக குறைபாடுகள் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
உயர் பணவீக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சி கலவையால் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும் எனவே அடுத்த ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சவாலான ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications