மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கியமான நிறுவனம் தான் டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனத்தின் Strategic Initiatives பிரிவுக்கான பொது மேலாளராக சாந்தனு நாயுடுவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. சாந்தனு நாயுடுவே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் காலமானார். ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தான் சாந்தனு நாயுடு. இருவருக்கும் இடையே பல ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும் இவ்விருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டினர். சாந்தனு மற்றும் ரத்தன் டாடாவின் நட்பு உலகையே வியக்க வைத்தது.

தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறைகளால் ரத்தன் டாடாவால் ஈர்க்கப்பட்டு அவருக்கு நெருக்கமானவராக மாறினார் சாந்தனு நாயுடு. குறிப்பாக செல்ல பிராணிகள் மீது அன்பு இருவரையும் ஒன்று சேர்த்தது என்று கூடகூறலாம். இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சாந்தனுவுக்கு பொது மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள சாந்தனு நாயுடு," என் அப்பா டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் இருந்து வெள்ளை நிற சட்டை மற்றும் நீல நிற பேண்ட அணிந்து பணி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் அவருக்காக ஜன்னலில் காத்திருப்பேன். வாழ்க்கை என்பது ஒரு வட்டம்" என கூறியுள்ளார்.
இவர் 2014ம் ஆண்டு தான் முதன்முதலில் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தார். ரத்தன் டாடாவுக்கு நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த பாசம் உண்டு. குறிப்பாக நாய்கள் மீது ரத்தன் டாடா அதிகம் அன்பு கொண்டவர். சாந்தனு நாயுடு தெரு நாய்கள் சாலைகளில் கார்களில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டம் தான் இவரை ரத்தன் டாடா மனதில் இடம் பிடிக்க வைத்தது.
அந்த திட்டத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா, சாந்தனு நாயுடுவுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட தொடங்கினார். பின்னாளில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். கடந்த 2018ஆம் ஆண்டு சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவின் உதவியாளராக பணிபுரிய தொடங்கினார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உள்ளார்.
ரத்தன் டாடாவுடனான தன்னுடைய நட்பு குறித்து I Came Upon a Lighthouse என்ற புத்தகத்தில் சாந்தனு நாயுடு எழுதியுள்ளார். ரத்தன் டாடாவின் உயிலில் கூட சாந்தனு நாயுடுவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ரத்தன் டாடா மறைந்த போது சாந்தனு நாயுடு, இந்த நட்பு விட்டு சென்ற வெற்றிடத்தை நிரப்ப என் காலம் வரை முயற்சி செய்வேன் , சென்று வாருங்கள் என் கலங்கரை விளக்கமே என பதிவு செய்திருந்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications