இந்தியாவில் உருவான முன்னணி சமூகவலைத்தளமான ஷேர்சாட் தளத்தின் வாடிக்கையாளர்கள், வர்த்தகம் அனைத்தும் வேகமாகக் குறைந்து வரும் வேளையில், பல சேவைகளை ஆட்டோமேஷன் செய்துள்ள காரணத்தாலும், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க இந்த வருடத்தில் 2வது முறையாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஷேர்சாட் நிறுவனம் இன்று சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டது. இதில் நிறுவனத்தில் விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இதன் மூலம் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.

இன்று ஷேர்சாட் நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 15 சதவீத பேரை பணிநீக்கம் செய்து, நிறுவனத்தில் இதர பணிகளையும் ஒழுங்குமுறை செய்துள்ளதால் வர்த்தகத்திலும், சேவையிலும் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அணியின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதால் செயல்திறன் அதிகரிக்கும் என நம்பி இந்தப் பணிநீக்கத்தைச் செய்துள்ளது.
ஷேர்சாட் மற்றும் மோஜ் செயலிகளின் தாய் நிறுவனமான Mohalla Tech ஜனவரி மாதம் தான் 500 ஊழியர்களை மொத்தமாகப் பணிநீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தில் 2வது முறையாகத் தற்போது 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்தப் பணிநீக்கம் மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்து, செலவுகள் குறைந்து அடுத்த 4-6 காலாண்டில் நிறுவனம் லாபகரமான நிலையை அடையும் என Mohalla Tech நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஷேர்சாட் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூகுள், Temasek ஆகியவற்றிடம் இருந்து சுமார் 255 மில்லியன் டாலர் அளவிலான தொகையை 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீட்டை திரட்டியது. தற்போது 50 மில்லியன் டாலரை திரட்ட முயற்சி செய்து வரும் வேளையில், இந்நிறுவனத்தின மதிப்பீடு 1.5 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் ஷேர்சாட் நிறுவனத்தின் வருவாய் 59.4 சதவீதம் உயர்ந்து 533 கோடி ரூபாயாக இருந்தாலும், நஷ்டம் 3241 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications