மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்தது போலவே, நுகர்வை அதிகரிக்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்தது. நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது, பருத்தி விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான ஐந்தாண்டு பணி திட்டத்தை அறிவித்தார். தரமான பருத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, கூடுதல் நீளமான பிரதான பருத்தி வகைகளை மேம்படுத்தும் பருத்தி உற்பத்தி திறனில் இந்த மிஷன் கவனம் செலுத்தும்.
மேலும், ஜவுளி துறைக்கான எங்கள் ஒருங்கிணைந்த 5f விஷனுடன் இணைந்து, இது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளி துறையை புத்துயிர் பெற தரமான பருத்தியின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யவும் உதவும் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில், பருத்தி விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான ஐந்தாண்டு பணி திட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜவுளித்துறையை சேர்ந்த பல பங்குகளின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது.

குறிப்பாக அம்பிகா காட்டன் மில்ஸ், கேபிஆர் மில், வர்தமான் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அரவிந்த் உள்ளிட்ட பங்குகளின் விலை 2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அம்பிகா காட்டன் மில்ஸ் பங்கின் விலை 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.1,674.95க்கு சென்றது. கேபிஆர் மில் லிமிடெட் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே சுமார் 3 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.962ஐ எட்டியது. வர்தமான் டெக்ஸ்டைல்ஸ் பங்கு விலை வர்த்தகத்தின் இடையே சுமார் 4 சதவீதம் உயர்ந்து ரூ.473.65ஆக இருந்தது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே அரவிந்த் லிமிடெட் பங்கு விலை 5 சதவீதம் அதிகரித்து ரூ.353.15க்கு சென்றது.
நிர்மலா சீதாராமன் மேலும் பட்ஜெட் உரையில், கிசான் கிரெடிட் கார்டுகள் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கனை வழங்கும். மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின்கீழ் கிசான் கிரெடிட் கார்டுகள் (கேசிசி) மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications