பெங்களூரு: இந்தியாவில் ஐடி உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு பெங்களூரு, சென்னை, நொய்டா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கின்றன. அப்படி நொய்டாவிலிருந்து வேலைக்காக பெங்களூருக்கு வந்தது மிகப்பெரிய தவறு என்று ஒரு இளைஞர் புலம்புகிறார்.
30,000 ரூபாய் ஊதிய உயர்வுக்காக நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என ஒரு ஊழியர் வெளியிட்டிருக்கும் புலம்பல் பலரது கவனத்தை பெற்றிருக்கிறது. ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ள அந்த நபர் என்னுடைய பட்டப்படிப்பை முடித்த பிறகு நொய்டாவில் வேலை கிடைத்தது. அங்கே ஓர் ஆண்டுக்கு மேலாக நான் வேலை செய்தேன் அந்த நகரமும் அங்கே இருந்த மக்களும் அங்கே கிடைத்த வசதிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறியுள்ளார்.

எனவே அடுத்தடுத்து வேலைகளுக்கு நான் அந்த பகுதியில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் ஒரே ஊருக்குள்ளேயே வேலை செய்தால் நமக்கான வாய்ப்புகள் பறிபோவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் வேறு நகரத்திற்கு செல்லலாம் என்ற முடிவையும் எடுத்தேன். அப்படிதான் நான்கு மாதங்களுக்கு முன்னர் 30000 ரூபாய் ஊதிய உயர்வுடன் நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு இடம் பெயர்ந்தேன் என கூறி இருந்தார்.
ஆனால் அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். மிகவும் அசுத்தமான நகரமாக இருக்கிறது பெங்களூரு, ஒழுங்கமைக்கப்பட்ட நகரமாக இல்லை. சாலைகள் மோசமாக இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கிறது ,தண்ணீர் சரியாக இல்லை, அது மட்டும் இன்றி வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் தென்னாட்டவர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நொய்டாவில் இதுபோன்ற ஒரு அடர்த்தியான மக்கள் தொகை மிகுந்த பகுதிகளை நான் பார்த்ததில்லை நொய்டாவுடன் ஒப்பிடும்போது பெங்களூருவில் அனைத்தும் அப்படியே எதிர்மாறாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு வந்தது குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். நொய்டாவிலிருந்து யாரேனும் பெங்களூருக்கு வேலைக்காக இடம் மாறப் போகிறீர்கள் என்றால் தயவு செய்து ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள் என கூறியுள்ளார்.
இந்த தகவல்களை கூறுவதற்காக நான் ஒரு வடநாட்டவர் என்று கருதாதீர்கள் நான் தென்னிந்தியாவை சேர்ந்தவன் தான் என குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் பெங்களூருடன் ஒப்பிடும் போது நொய்டா மிகவும் பாதுகாப்பான நகரம் என்றும் இது சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் தான் பெங்களூரில் இருந்து நொயிடாவுக்கு இடம் பெயர்ந்தேன் என்றும் அது சிறந்த முடிவு என்றும் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications