இந்தியாவின் கொரோனா 2வது அலையின் வீரியம் குறைந்து கடந்த இரண்டு நாட்களாகத் தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தாலும், கொரோனா காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முக்கியமானதாக விளங்கும் தடுப்பு மருந்துக்கு அதிகளவிலான பற்றாக்குறை உள்ளது.
இந்த நிலையைச் சமாளிக்க மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவற்றைத் தொடர்ந்து 3வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வேக்சின் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்ய ஸ்புட்னிக் வேக்சின்
ரஷ்ய ஸ்புட்னிக் வேக்சின்-ஐ தயாரிக்கும் உரிமையைப் பல வாரங்கள் பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியாவின் டாக்டர் ரெட்டி லேப்ஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் தனது நிறுவன ஊழியர்களுக்கும், இந்த வார இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
டாக்டர் ரெட்டி லேப்ஸ்
மேலும் சீரம், பாரத் பயோடெக் போன்று அல்லாமல் டாக்டர் ரெட்டி லேப்ஸ் மற்றும் ரஷ்யா டெவலப்மெண்ட் இன்வெஸ்ட்மென்ட் பன்ட், ஸ்புட்னிக் வி வேக்சின் பார்முலாவை அவசரக் கால அடிப்படையில் பிற நிறுவனங்களுக்குப் பகிர ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் பிற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முறையில் வேக்சினை தயாரிக்க முடியும்.
ஷில்பா பயோலாஜிக்கல் நிறுவனம்
இத்திட்டத்தின் முதலாவதாக ஷில்பா மெடிகர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஷில்பா பயோலாஜிக்கல் நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின்-ஐ தயாரிக்க டாக்டர் ரெட்டி லேப்ஸ் உடன் 3 வருடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 வருடத்திற்கு இந்நிறுவனம் உற்பத்தி செய்து Dr.ரெட்டிஸ் நிறுவனம் மார்கெட்டிங்/விநியோகத்தை இந்தியா முழுவதும் செய்ய உள்ளது.
5 கோடி டோஸ் வேக்சின்
ஷில்பா மெடிகர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஷில்பா பயோலாஜிக்கல் நிறுவனம் உற்பத்தி துவங்கும் நாளில் இருந்து அடுத்த 12 மாதத்தில் 5 கோடி டோஸ் (5 கோடி காம்போனெட் 1, 5 கோடி காம்போனெட் 2) தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வேக்சின் விலை குறையுமா..?
ஷில்பா பயோலாஜிக்கல் நிறுவனம் தயாரிக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின்-ஐ Dr.ரெட்டிஸ் நிறுவனமே விற்பனை செய்யும் காரணத்தால் 948 ரூபாய்+5% ஜிஎஸ்டி (மொத்தம் 995.40 ரூபாய்) அளவில் இருந்து மாறாது. ஆனால் இதேவேளையில் உள்நாட்டில் தயாரிக்கும் மருந்தின் விலை குறையும் என Dr.ரெட்டிஸ் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.
ஷில்பா மெடிகேர் பங்கு விலை
இந்த அறிவிப்பால் ஷில்பா மெடிகேர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று கிட்டதட்ட 10 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்து 44 ரூபாய் வரைவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் 465 ரூபாய்க்குத் துவங்கிய பங்குகள் 516.70 ரூபாய் வரையில் உயர்ந்து தற்போது 498.05 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications