தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 5 ஆண்டுகளாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஸ்டாலினுக்கு மக்கள் இம்முறை எம்எல்ஏ பதவி கூட கிடைக்காமல் போய்விட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. திமுக 2.0 ஆட்சி அமைப்பது உறுதி என சொல்லப்பட்ட நிலையில் மக்கள் தீர்ப்பு அதற்கு மாறாக அமைந்துள்ளது. மக்கள் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெகவுக்கு வாக்குகளை அள்ளி குவித்துள்ளனர்.

தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் சுற்றில் ஆரம்பித்து தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வந்தார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வந்த நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு மொத்தம் 82110 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் 72,988 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். கிட்டதட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 2011ஆம் ஆண்டு உருவான தொகுதியாகும். இந்த தொகுதி உருவானது முதலே ஸ்டாலின் தான் வென்று வருகிறார். இதுவரை நடந்த 3 தேர்தல்களிலும் ஸ்டாலின் தான் வென்றார்.
2011ம் ஆண்டு கொளத்தூரில் நடந்த முதல் தேர்தலில் அதிமுகவின் சைதை துரைசாமியை 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ஸ்டாலின். 2016ம் ஆண்டு அதிமுகவின் ஜே.சி.டி பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்டு, சுமார் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமைக் காட்டிலும் சுமார் 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, தனது செல்வாக்கை நிரூபித்தார்.
அந்த வகையில் இந்த முறையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக பின்னடைவை சந்தித்தாலும் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்துள்ளார். அந்த வகையில் 5 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தவருக்கு ஒரு எம்.எல்.ஏ பதவியை கூட மக்கள் தரவில்லை. அந்த அளவுக்கு ஆட்சியின் மீது மக்கள் எதிர்ப்பு மனநிலை இருந்திருக்கிறது இதனை ஸ்டாலின் சரியாக கணிக்க தவறிவிட்டதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதே வேளையில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications

