பெங்களூரு: ஐடி உள்ளிட்ட துறைகளில் கல்லூரி மேற்படிப்பை முடிப்பவர்களுக்கு இறுதியாண்டு கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலமாக பெரிய கம்பெனியில் பணிக்கு அமர வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும்.
இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இப்படி கேம்பஸ் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் இந்த முன்னணி ஐடி நிறுவனங்கள் கேம்பஸ் மூலம் ஆட்களை பணிக்கு எடுப்பதை படிப்படியாக குறைத்து வருகின்றன.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் புதிதாக எத்தனை பேர் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. இதன்படி 2024 ஆம் நிதி ஆண்டின் இன்ஃபோசிஸ் நிறுவனம் அண்மையில் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த 11 ஆயிரத்து 900 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஃபிரஷ்ஷர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதுவே 2023 ஆம் ஆண்டில் சுமார் 50,000 பேரை இந்த நிறுவனம் வேலைக்கு அமர்த்தி இருந்தது. நடப்பாண்டில் அது 76% குறைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 25,000 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது 2024ஆம் நிதி ஆண்டின் இறுதியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 3.17 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். தங்கள் நிறுவனத்தில், கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்களை ஃபிரஷ்ஷர்களாக தேர்வு செய்யும் விதிமுறைகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் மாற்றிக் கொண்டிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆன் கேம்பஸ் மட்டுமல்லாமல் ஆஃப் கேம்பஸ் முறையில் ஆட்களை தேர்வு செய்யும் முறைக்கு ஐடி நிறுவனங்கள் மாறியுள்ளன. தற்போது இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் கேம்பஸ் மூலம் ஊழியர்களை தேர்வு செய்வதை குறைத்து வருகின்றன. இது தற்போது கல்லூரியில் பயின்று வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் மட்டுமல்ல டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களும் இதுபோல ஆஃப் கேம்பஸ் முறையில் ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்யும் முறைக்கு மாறியுள்ளன.
இதனிடையே இன்ஃபோசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சலில் பரேக், கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 2.50 லட்சம் ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி அளித்திருப்பதாக கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 39% பேர் பெண்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications