அரசாங்கம் பொதுமக்களுக்கு தனிநபர் வருமானம், நிறுவனங்கள் என்ற அடிப்படையில் வரிகளை விதிக்கிறது. இதில் பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்ற விவாதம் அடிக்கடி எழுகிறது.
வரி விதிப்பு முறை அனைவருக்கும் சமமானதாக இருக்கக் கூடாது வருமானம் மற்றும் செல்வ நிலையை பொறுத்து வரி விதிப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வருகிறது.

பெரும் பணக்காரர்களுக்கு அவர்களின் செல்வாக்கிற்கு ஏற்ற வகையில் சூப்பர் டேக்ஸ் அல்லது செல்வ வரி விதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கூறப்படுகிறது. சூப்பர் வரி என்று அழைக்கப்படும் இந்த கூடுதல் வரியானது அதிக வருமானம் பெறும் அல்லது கணிசமான செல்வத்தை குவித்திருக்கும் நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி ஆகும்.
ஒவ்வொருவருக்கும் குறிப்பாக செல்வந்தர்கள் சமூகத்திற்கு நியாயமான முறையில் திருப்பித் தருவதை உறுதி செய்வதே கூடுதல் வரியின் நோக்கம் என சொல்லப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பொது சேவைகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் மக்கள் அதிக அளவு பங்களிப்புகளை செய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
ரெடிட் தளம் நடத்திய விவாதத்தில் பங்கேற்று பேசிய மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றார். மிகப்பெரிய பணக்காரர்கள் அதிக வரிகளை செலுத்த வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை உடையும் என அவர் தெரிவித்திருந்தார்.
பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி பில்கேட்ஸைத் தவிர உலகப் பொருளாதார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு 250க்கும் மேற்பட்ட மில்லினியர்கள் மற்றும் பில்லினியர்கள் எழுதிய கடிதத்தில், தங்கள் செல்வத்திற்கு அதிக வரி செலுத்த தயாராக இருப்பதாகவும் அதன் மூலம் தங்களுக்கு பெருமை கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
அதிக வருமானம் ஈட்டும் மக்கள் சுகாதாரம், கல்வி போன்ற சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அதிகளவில் பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. பெரும்பாலான உலக பணக்காரர்கள் அறக்கட்டளைகளை நடத்தி அதன் மூலம் பல்வேறு பொதுச்சேவைகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
எனவே தனியாக அவர்களை வரி செலுத்த கூறுவது சரியாக இருக்குமா என்ற பதில் வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கூடுதல் வரி என்ற ஒரு முறை வரும் போது அனைத்து செல்வந்தர்களும் சமூக பொறுப்பை உணர்ந்து சமமான பங்களிப்பை தருவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
Story written by: Devika


Click it and Unblock the Notifications