இது இந்திய நிதிச் சேவைத் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு வெள்ளிக்கிழமை, ஜப்பான் நாட்டின் MUFG வங்கியிடம் இருந்து சுமார் ரூ.39,617 கோடி அளவிலான தொகையை முதலீடாக திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முதலீடு Preferential issue வாயிலாக நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது, இது தொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடந்து வந்த நிலையில், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முதலீட்டுக்காக MUFG வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 20 சதவீத பங்குகளை பெற உள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் வரையில் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தில் ரூ.913.50 அளவீட்டை புதிய 52 வார உயர்வை பதிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் சுமார் 53.90 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
மேலும் இரு நிறுவனங்களுக்குமான பேச்சுவார்த்தையின் படி MUFG வங்கிக்கு 47.11 கோடி பங்குகளை ரூ.840.93 விலைக்கு ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வழங்கும். இதை மொத்த பங்குகளுடன் கணக்கிடப்பட்டால் 20 சதவீத பங்காகும். இந்த முதலீட்டை திரட்ட இரு தரப்பில் ஒப்புதல் கொடுக்கப்பட்டாலும், அடுத்தக்கட்ட ஒப்புதல் மிகவும் அவசியமாக உள்ளது.
இந்த முதலீடுக்கு செபி, ரிசர்வ் வங்கி, இந்திய போட்டி ஆணையம் ஆகியவை அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக ஜனவரி 14, 2026 அன்று ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குதாரர்கள் சிறப்பு பொதுக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த முதலீடு இந்திய நிதிச் சேவைத் துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கு புதிய பென்ச்மார்க் அளவீட்டை வைத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கும் வேளையில், நிதிதுறையில் பதிவாகியுள்ள மாபெரும் முதலீடு புதிய துவக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications