ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்தது , 5ஜி தொழில்நுட்பத்தின் வருகை உள்ளிட்டவை காரணமாக இந்தியா முழுவதுமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றை அதிகமான மக்கள் பார்க்கிறார்கள். எப்போது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் போனும் கையுமாக தான் இருக்கிறார்கள்.
குழந்தைகள் மத்தியில் இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெரியவர்களுக்கு நிகராக குழந்தைகளும் போனும் கையுமாகவே இருக்கிறார்கள். எப்பொழுது பார்த்தாலும் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை பார்க்கிறார்கள். குழந்தைகள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் சமூக வலைதள பயன்பாடும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் வருகிறது என மனநல மருத்துவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

குழந்தைகள் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் போது அவர்களின் நடத்தையிலேயே பாதிப்பு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து இருக்கிறது. முதன்முதலாக ஆஸ்திரேலியா அரசாங்கம் தான் இத்தகைய நடவடிக்கை எடுத்தது.
2025 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆகியவை இதில் அடங்கும். அடுத்ததாக பிரான்ஸ் நாடு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்ற வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. மலேசியா, இத்தாலி ஆகிய நாடுகளும் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

இந்தியாவிலே கூட ஆந்திரா மற்றும் கோவா மாநில அரசுகள் இதுபோன்ற ஒரு தடையை விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மாநிலத்தின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக இந்த நடவடிக்கையை கர்நாடகா எடுத்துள்ளது.
மொபைல் போன்கள் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளை தடுக்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என அவர் அறிவித்தார். அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை தடுப்பது இந்த தடையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட இந்த தடை எப்படி செயல்படுத்தப்போகிறது என்ற விரிவான அறிவிப்புகளை விரைவில் கர்நாடகா அரசு வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications