உலகம் முழுவதும் ஏஐ துறை வளர்ச்சியின் எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதால், இத்துறையின் மீது முதலீடு செய்வதை கண்டு முதலீட்டாளர்கள் அஞ்சி பின்வாங்கி வந்த வேளையில், அனைத்து ஏஐ முதலீட்டாளர்களையும் காப்பாற்றியது ஆந்திரோபிக் நிறுவனத்தின் ஐபிஓ தான்.
ஏஐ துறையில் குறுகிய காலத்தில் பெரும் புரட்சி செய்த ஆந்திரோபிக், இந்த ஐபிஓவில் 70- 78 டாவர் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 83 டாலர் விலையில் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் நாஸ்டாக்-ல் இன்று பட்டியலிடப்படுகிறது.

இந்த ஐபிஓவில் மொத்தம் 980 மில்லியன் பங்குகள் விற்கப்பட்டு ஆந்திரோபிக் சுமார் 81.3 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டியுள்ளது. இதன் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 75 பில்லியன் டாலர் மாபெரும் ஐபிஓ சாதனையை முறியடித்துள்ளது ஆந்திரோபிக்.
இதேபோல் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை பிரைவேட் பிளேஸ்மென்ட் ஆக வைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக, இந்த ஐபிஓ மூலம் 107.3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை திரட்டி அசத்தியுள்ளது.
ஆந்திரோபிக் நிறுவனத்தின் இந்த ஐபிஓ மூலம் இந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பில்லியனர்கள், மில்லியனர்கள் என புதிய உச்சத்தை எட்டியுள்ளது டெக் துறையில் மிகப்பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது.

ஆந்திரோபிக் நிறுவனத்தின் 7 இணை நிறுவனர்கள் ஏற்கனவே பில்லியனராக இருந்த நிலையில் இந்த ஐபிஓ மூலம் இவர்களின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து 7 பேரின் மொத்த சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் 7 இணை நிறுவனர்களான டாரியோ அமோடி, டேனிலா அமோடி, டாம் பிரவுன், ஜாக் கிளார்க், ஜாரெட் கபிலன், சாம் மெக்கண்ட்லிஷ், கிறிஸ்டோபர் ஓலா ஆகியோரின் சொத்து மதிப்பு சராசரியாக 19.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து ஆந்திரோபிக்-ன் 3 முக்கிய முதலீட்டாளர்களான எரிக் ஷ்மிட், ஹுசைன் சஜ்வானி, ஜான் தாலின் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு இந்த ஐபிஓ வாயிலாக மட்டும் 9 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
மேலும் Anthropic நிறுவனத்தின் மதிப்பு 1.5 டிரில்லியன் டாலராக உயரும்போது, இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள சுமார் 50 ஊழியர்களின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உயரக்கூடும் என Hill நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதுதவிர, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மில்லியனர்களாக மாறும் வாய்ப்புள்ளது.
இதேபோல் ஆந்திரோபிக் நிறுவனத்தின் IPO முடிந்து பங்குகள் பட்டியலிடப்படும் முதல் நாளிலேயே, இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் அல்லாத ஊழியர்கள் தங்களிடம் இரு்ககும் பங்குகளில் சுமார் 10% வரை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று பட்டியலிட்ட பின்பு எத்தனை பேர் தங்களின் பங்குகளை விற்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை, இதேபோல் ஒவ்வொரு ஊழியரிடமும் எவ்வளவு பங்குகள் இருக்கிறது என்ற விபரமும் முழுமையாக தெரியாத காரணத்தால் சரியான பில்லியனர், மில்லியனர் எண்ணிக்கை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
