உலக அளவில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளியின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது . சென்னையில் சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி கடந்த வாரத்தில் வரலாற்று உச்சமாக ஒரு கிராம் 216 ரூபாய் என்ற விலையை எட்டியது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் வெள்ளிக்கான மார்ச் மாத கான்ட்ராக்ட் 2 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது.
தங்கத்தை விட வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு தங்கத்தை போலவே வெள்ளியும் எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 18 ரூபாய் விலை உயர்வு கண்டது. இந்த சூழலில் சீனா கையில் எடுத்திருக்கக் கூடிய ஒரு நடவடிக்கை வெள்ளியின் விலையை மேலும் உயர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது .

சீன அரசாங்கம் வெள்ளிக்கான ஏற்றுமதிக்கு திடீரென கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஜனவரி 2026 ஆம் ஆண்டு அதாவது அடுத்த மாதத்தில் இருந்து வெள்ளி ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அண்மையில் தான் அமெரிக்க அரசாங்கம் வெள்ளியை அரியவகை தனிமமாக அறிவித்தது. இந்த சூழலில் சீனா வெள்ளிக்கான ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது . இது மேற்கொண்டு வெள்ளி விலையை உயர்த்தும்.
சீன நிறுவனங்கள் வெள்ளியை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் அதற்கு அரசிடம் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டுக்கு 80 டன்கள் அளவிற்கு வெள்ளியை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே வெள்ளி ஏற்றுமதிக்கான உரிமத்திற்கு விண்ணப்பம் செய்து பெற முடியும். சிறு வணிகர்களுக்கும் சிறு ஏற்றுமதியாளர்களுக்கும் வெள்ளியை ஏற்றுமதி செய்வதற்கு தடையை ஏற்படுத்தி இருக்கிறது .
சில்வர் அகாடமி உலகிலேயே அதிக அளவு வெள்ளியை தோண்டி எடுக்கக்கூடிய இரண்டாவது பெரிய நாடு சீனா என தெரிவிக்கிறது . உலக சந்தையில் 60 லிருந்து 70 சதவீதத்திற்கும் அதிகமான வெள்ளியை சீனா தான் விநியோகம் செய்கிறது என கூறுகிறது. இந்த சூழலில் சீனா திடீரென வெள்ளிக்கான ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது உலக அளவில் வெள்ளிக்கான தட்டுப்பாடை இன்னும் அதிகரிக்கும்.
ஏற்கனவே சோலார் பேனல், மின்சார வாகனங்கள், மின்னனு சாதனங்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்திக்கு வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்து சப்ளை குறைவாக இருக்கிறது. இந்த சூழலில் சீனாவும் வெள்ளியின் இறக்குமதியை தடுப்பது மேற்கொண்டு வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரிக்கச் செய்யும். இது வெள்ளியின் விலை மட்டுமல்ல குறிப்பிட்ட சோலார் பேனல் மற்றும் மின்னணு சாதனங்களின் விலையையும் உயர்த்த செய்யும்.
சீனாவின் இந்த நடவடிக்கையால் ஒரு ஆண்டுக்கு 5000 டன்கள் வரை வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என சில்வர் அகாடமி கூறுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை உலக சந்தையில் வெள்ளியின் விலை 115 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தொழில்துறை தேவைதான் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சூழலில் சீனாவின் இந்த நடவடிக்கை அடுத்த கட்டமாக வெள்ளி விலையை தாறுமாறாக உயர்த்த போகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications