மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு நடத்திய ஒரு விருந்து நிகழ்வில் விருந்தினர்களுக்கு வெள்ளித் தட்டில் விருந்து அளிக்கப்பட்டதும் விருந்து உபசரிப்புக்காக மட்டும் 27 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருக்கும் விதான் பவனில், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பட்ஜெட் குழு உறுப்பினர்களுக்கு ஆடம்பரமான விருந்து வழங்கப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநில அரசு சார்பாக வழங்கப்பட்ட விருந்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்ட்ராவில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பட்ஜெட் குழுவினர் இரண்டு நாட்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மகாராஷ்டிரா அரசு சார்பாக விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு இந்த விருந்தினர்களுக்கு வெள்ளி தட்டில் உணவு பரிமாறி இருக்கிறது. ஒரு வெள்ளி தட்டினை 550 ரூபாய் என வாடகைக்கு எடுத்து விருந்தினர்களுக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள உணவினை வைத்து பரிமாறி இருக்கின்றனர் . மகாராஷ்டிரா அரசின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி மாநில பொருளாதாரம் திவால் நிலையில் இருக்கும் சூழலில் அரசு வெள்ளி தட்டு வாடகைக்கு எடுத்து இப்படி ஆடம்பரமான விருந்தினை வழங்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான விஜய் படேட்டியார் ஒவ்வொரு விருந்தினரின் உணவுக்காகவும் அரசு 5000 ரூபாயை செலவு செய்திருக்கிறது , ஆனால் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யுங்கள் எனக் கூறினால் அதற்கு முடியாது என தெரிவிக்கிறார்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி வைத்து விட்டு இவர்களுக்கு ஏன் ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
600 விருந்தினர்களுக்கு 27 லட்சம் ரூபாய் செலவு செய்து விருந்து தந்திருக்கிறது அரசு என விமர்சனம் செய்திருக்கும் சமூக ஆர்வலர் விஜயகும்பார் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இருக்கிறார்கள் , இந்த நிகழ்வுக்கான விளம்பரத்திற்கு 40 அடி நீள பேனர், உறுப்பினர்கள் தங்குவதற்கு தாஜ் ஹோட்டல் ,விருந்து சாப்பிட ஏசி அறை என செலவு செய்துள்ளனர் என சாடியுள்ளார். பொதுமக்களுக்கு சிக்கனத்தை சொல்லித் தர வேண்டிய குழுவே ஆடம்பர செலவுகளை செய்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications