சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு வரலாற்றுச் சாதனை லாபத்தைப் பெற்றுள்ள நிலையில், தனது ஊழியர்களுக்கு எட்டு மாத சம்பளத்தை போனஸாக வழங்க திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 6.65 மாத சம்பள போனஸை விட அது அதிகம் என்பது கூடுதல் அதிர்ச்சியான விஷயம்.
பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவல் படி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு எட்டு மாத சம்பளத்திற்கு சமமான போனஸ் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. போனஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

2023 முதல் 2024 நிதியாண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வரலாற்று சாதனை அளவிலான 1.98 பில்லியன் சிங்கப்பூர் டாலர் லாபத்தை பதிவு செய்துள்ளது. மார்ச் 31, 2024 ம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்த விமான நிறுவனத்தின் வருவாய் 24 சதவீதம் அதிகரித்து 2.7 பில்லியனை டாலரை எட்டியுள்ளது.
"கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்கள் எல்லைகளை முழுவதுமாக திறந்ததால், வடக்கு ஆசியாவில் விமான பயணத்திற்கான தேவை ஆண்டு முழுவதும் சிறப்பாக இருந்தது," என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது லாப அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் மொத்த வருவாய் 7% அதிகரித்து சாதனை 19 பில்லியன் டாலரை எட்டியுள்ளது, பயணிகள் எண்ணிக்கை 17.3% உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது குறைந்த செலவு விமான நிறுவனமான ஸ்கூட் உடன் இணைந்து கடந்த ஆண்டு 36.4 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்துள்ளது. இதன் எதிரொலியாகத் தான் போனஸ்-ஐ அள்ளிக்கொடுக்கிறது.
இப்படி கவர்ச்சிகரமான போனஸ் வழங்கும் விமான நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டுமல்ல. துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வரலாற்றுச் சாதனை லாபத்தைப் பதிவு செய்த பிறகு, தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்குச் சமமான போனஸை வழங்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications