சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி திரைப்படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமூக வலைதளங்கள் தொடங்கி எங்கு பார்த்தாலும் கூலி திரைப்படம் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கூலி படம்: வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ,நாகர்ஜுனா, உபேந்திரா ,அமீர்கான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அனிருத்தின் இசை ஏற்கனவே பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகிவிட்டது.

நாளை மறுதினம் ரிலீஸ்: நாளை மறுதினம் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சினிமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். முதல் நாளன்று முதல் காட்சியை கண்டுவிட வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் அலுவலகங்களில் போலியாக காரணம் கூறி விடுப்பு எடுப்பது வாடிக்கை. ஆனால் தற்போது நிறுவனங்களே விடுமுறை வழங்க முன் வந்துவிட்டன.
சிங்கப்பூர் நிறுவனம் அதிரடி: சிங்கப்பூரை சேர்ந்த Farmer constructions லிமிடெட் என்ற நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு கூலி திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று விடுமுறை அளித்து இருக்கிறது. சிங்கப்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது Farmer constructions பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் . இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூப்பர் ஸ்டாரின் கூலி திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது இதனை ஒட்டி நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய தமிழ் பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுப்பாக அறிவிக்கிறோம் என தெரிவித்திருக்கிறது.

பாப்கார்ன் வாங்கவும் பணம்: இது தவிர நிறுவனமே பணியாளர்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டையும் வாங்கி வழங்கியுள்ளது. மேலும் ஊழியர்கள் திரைபடத்தை கொண்டாடும் வகையில் அவர்களுக்கான பாப்கார்ன் மற்றும் பானங்களுக்கு என 30 டாலர்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்த செயல் ரஜினி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தான் இப்படி ரஜினி பட வெளியீட்டுக்கு விடுமுறை வழங்கும் தற்போது சிங்கப்பூரிலும் இந்த டிரெண்ட் தொடங்கியுள்ளது.
சென்னை நிறுவனம் விடுமுறை: முன்னதாக தமிழ்நாட்டில் செயல்படும் Uno Aqua Care என்ற நிறுவனம் கூலி படம் பார்ப்பதற்கான ஊழியர்கள் போலியாக காரணம் கூறி விடுமுறை எடுக்க வேண்டாம், நாங்களே விடுமுறை அறிவித்து விடுகிறோம் என தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படம் ரிலீஸையொட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுமுறை அறிவிக்கிறோம் மேலும் ஊழியர்களுக்கு நாங்களே டிக்கெட்டும் வழங்குகிறோம் என அறிவித்துள்ளது.
மேலும் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்குவதோடு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Uno Aqua Care நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications