டெல்லி: உலகம் முழுவதிலும் சமூகவலைதளங்கள் பலரையும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. தங்களின் தனிப்பட்ட திறன்களை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியீடு செய்து பல கலைஞர்கள் உருவாகியுள்ளனர். அப்படி சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி பாலிவுட் வரை சென்றிருக்கும் ஒரு பாடகி தான் சலோனி தாக்கர்.
இவர் ஐடி நிறுவன ஊழியர்கள் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் இரண்டு மணி நேரங்களில் சம்பாதித்து விடுவோம் என கூறுகிறார். ரெடிஃப் டாட் காம் தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் பிரபல பாடகி சலோனி தாக்கர் இந்தியாவில் இசை துறை எப்படி இருக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் எம்பிஏ அல்லது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்று மாதந்தோறும் ஒரு நபர் சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் இரண்டு மணி நேரம் பாட்டு பாடி சம்பாதித்து விடுவோம் என கூறியுள்ளார். குறிப்பாக தன்னை போன்ற பாடகர்களுக்கு நேரலை இசை நிகழ்ச்சிகள் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது எனக் கூறியுள்ளார் .
மக்களிடையே நன்கு அறிமுகமான பாடகர்கள் என்றால் லைவ் கான்சர்ட் எனப்படும் இசை நிகழ்ச்சிகள் மூலமாக அவர்களுக்கு பல லட்சங்கள் கிடைத்துவிடும் எனக் கூறியுள்ள சலோனி தாக்கர், நீங்கள் எவ்வளவு புகழ்ச்சியுடன் இருக்கிறீர்களா அவ்வளவு அதிக தொகை உங்களுக்கு கிடைக்கும் என கூறுகிறார். ஒரு குறிப்பிட்ட இசைக் கலைஞரின் புகழ்ச்சி அவருக்கான வருமானத்தை தீர்மானிக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
சலோனி தாக்கர் ஒரு சுயாதீன கலைஞராக தன்னுடைய இசை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய யூடியூப் சேனல் வாயிலாக மக்களிடையே பிரபலமடைந்த அவர் பாலிவுட் படங்களில் பாட்டு பாடி வட இந்தியாவில் புகழ்பெற்றார். தற்போது தென்னிந்திய இசை உலகிலும் அவர் கால் பதித்துள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் தண்டேல் படத்தில் நடிகை சாய் பல்லவிக்காக இவர் பாடி இருக்கும் நமோ நமசிவாய பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக படங்களில் பாட்டு பாடுவது மற்றும் சொந்தமாக பாடல்களை தயாரித்த வெளியிடுவது, நேரலை இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதென பிஸியாக இருக்கிறார்.
இசை துறையில் கால் பதிக்க வேண்டும் என விருப்பம் கொண்டவர்களுக்கு, "இங்கே நிறைய போட்டி இருக்கிறது என்பதையும் அனைவரும் கடினமாக உழைக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்குகிறார். உங்களுக்கு ஒரு ஜானரை உருவாக்கி அதில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இசை உலகில் சாதிக்க முடியும் என்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications