மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது 2 பொதுவான அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று எஸ்ஐபி திட்டங்கள், மற்றொன்று லம்சம் என்று சொல்லக்கூடிய மொத்தமாக முதலீடு செய்யும் முறை. இரண்டிற்குமே தனித்தனி நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு எந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படும். அதற்கான விடையைத் தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
எந்த ஒரு அணுகுமுறையை கடைபிடித்தாலும் சரி அதற்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பது தான் முதலீட்டாளர்களின் விருப்பம். மியூச்சுவல் ஃபண்டுகளில் சந்தை அபாயம் ஒரு புறம் இருந்தாலும் வருமானமும் அதிகமாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் லம்சம் ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்ப்போம்.

எஸ்ஐபி என்றால் என்ன?: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-கள் இளம் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலம். ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டங்களைப் போலவே மாதா மாதம் இந்தத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். இதனால் சேமிப்பதே தெரியாமல் செல்வத்தை உருவாக்க முடியும். சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மற்றும் முதல் முறை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களிடையே எஸ்ஐபி மிகவும் பிரபலம்.
மாதம் மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை அரையாண்டுக்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஓய்வூதியம், குழந்தையின் கல்வி, வீடு வாங்குவது என நீண்ட கால இலக்குகளுக்கு சிறந்த தேர்வாக இந்த திட்டம் இருக்கும்.
லம்சம் முதலீடு என்றால் என்ன?: லம்சம் முதலீடு என்பது பிக்சட் டெபாசிட் திட்டங்களைப் போலவே ஒரு பெரிய தொகையை ஒரே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாகும். இந்தத் தொகை குறிப்பிட்ட காலத்திற்கு லாக் செய்து வைக்கப்படும். அதற்கு வட்டி வருமானம் கிடைக்கும். போனஸ், சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் பணம் அல்லது பரம்பரை சொத்துக்கள் போன்றவற்றை உடனடியாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த லம்சம் முதலீடு ஏற்றது.
இந்தத் திட்டத்தின் நன்மை என்னவென்றால் முழு தொகையும் உடனடியாக செலுத்தப்படுவதால் கூட்டு வட்டியின் நன்மையை உடனடியாகப் பெற தொடங்கலாம். சந்தை நிலவரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் உங்களுக்கு அதிக அளவிலான வருமானம் கிடைக்கும். ஆனால் ஆபத்து என்னவென்றால் சந்தை வீழ்ச்சி ஏற்படும் போது உங்களுடைய மொத்த முதலீடும் இழப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனால் தான் மொத்த தொகையாக முதலீடு செய்வது அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு சிறப்பாக செயல்படும்.
உதாரணமாக ஒரு நபர் எஸ்ஐபி திட்டங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாதம் மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு 12 சதவீத வட்டி வருமானம் கிடைத்தால் வெறும் வட்டியாக மட்டும் ரூ.2,10,000 கிடைக்கும். அப்படியானால் வட்டியும், 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட்ட ரூ.6 லட்சத்தையும் சேர்த்து ரூ.8,10,000 பெற்றுக் கொள்ளலாம்.
அதுவே ரூ.6 லட்சத்தை ஒருவர் மொத்தமாக முதலீடு செய்கிறார். இதன் லாக்கின் காலம் 5 ஆண்டுகள் என்றால் 12 சதவீத வட்டி வருமானத்தில் மொத்தமாக 6,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பார். இதாற்கு வட்டியாக ரூ.4,56,000 பெறலாம். இதனால் முதலீடு செய்யப்பட்ட ரூ.6 லட்சம் அதோடு வட்டியாக கிடைத்த ரூ.4,56,000 ஆகியவற்றை சேர்த்து 10,56,000 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தமாக முதலீடு செய்யப்படுவதால் கூட்டு வட்டியின் நன்மையை பெறலாம். ஆனால் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அபாயம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். ஆனால் மாதா மாதம் கணிசமாக முதலீடு செய்யும் போது வருமானம் குறைவாக இருந்தாலும் சேமிப்பதே தெரியாமல் சேமிக்க முடியும். ஆனால் இதனாலும் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே இந்த 2 திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு தனிப்பட்ட நபரின் நிதி நிலையை பொறுத்தது. முதல் முறையாக முதலீடு செய்பவர்கள், சம்பளம் பெறும் தனிநபர்கள், மார்க்கெட் நேரங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சேமிக்க விரும்புபவர்கள், நீண்ட காலத்திற்கு சேமிக்க நினைப்பவர்கள் எஸ்ஐபி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
அதுவே உங்களிடம் அதிகபட்சமாக கையில் தொகை இருக்கிறது அதை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் லாபம் ஈட்ட நினைத்தாலோ லம்சம் முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும். இந்த பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே உங்கள் நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்கள்!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications