கோயம்புத்தூரில் எங்குத் திரும்பினாலும் ஐடி பார்க் கட்டப்பட்டு வரும் வேளையில், உற்பத்தித் துறைக்கு வாய்ப்பே இல்லையா எனப் புலம்பிய தொழிற்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் சிப்காட் வர உள்ளது.
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் சிப்காட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் உற்பத்தி நகரமாக இருந்து ஐடி நகரமாக மாறிவரும் வேளையில் சென்னையைப் போலச் சேவை - உற்பத்தித் துறை சமநிலைப்படுத்தும் வகையில் பல உற்பத்தி நிறுவனங்கள் கோயம்புத்தூர்-க்கு படையெடுத்து வருகிறது.

இதற்கு ஏற்றார்போல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் தாலுக்காவில் வரப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் பகுதியை உருவாக்க உள்ளது. இந்தச் சிப்காட் பகுதியை TIDCO மூலம் இணைந்து பாதுகாப்புத் துறைக்கான பிரத்தியேக தொழிற்பூங்காவாக உருவாக உள்ளது.
வரப்பட்டி கிராமத்தில் சுமார் 373 ஏக்கரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த டிபென்ஸ் காரிடார் அமைய உள்ளது. இதில் சுமார் 75 ஏக்கர் நிலம் தனிப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது, மேலும் இந்தச் சிப்காட் பகுதியைத் தமிழ்நாடு அரசின் சிப்காட் மற்றும் TIDCO இணைந்து சுமார் 293 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டமைக்க உள்ளது.
373 ஏக்கர் நிலத்தைச் சமன்படுத்தித் தொழிற்துறை பூங்காவாக மாற்றும் பணிகள் பல்வேறு ஒப்புதல்கள் பெற வேண்டிய நிலையில், வருகிற நவம்பர் மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்காட் அமைப்பு 373 ஏக்கர் Varapatti Defence Industrial Park திட்டத்தைச் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக விண்ணப்பத்தையும், திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற் பூங்கா, சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கும் சிப்காட் 15 மாவட்டத்தில் 24 தொழிற்பூங்காவை உருவாக்கி நிர்வாகம் செய்து வரும் வேளையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் சிப்காட் தொழிற் பூங்காவை அமைக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்திலே பெரம்பலூரில் இருக்கும் இறையூர் சிப்காட், ராணிப்பேட்டையில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட், ஓசூரில் உள்ள சூளகிரி ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளைச் செய்யச் சிப்காட் டெண்டர் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications