சிவசுப்பிரமணியன் ராமன், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தலைவராக ஜூன் 20, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு முக்கிய அமைப்பாகும். இந்த அமைப்பு இந்தியாவில் ஓய்வூதியத் துறையை நிர்வாகம் செய்யும் ஒழுங்குமுறை அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பு 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

PFRDA அமைப்பு இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) நிர்வகிக்கிறது. மேலும் ஓய்வூதிய நிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, நாட்டு மக்களுக்கு முதுமைக்கால வருமானப் பாதுகாப்பை உருவாக்கியும் , பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை நிர்வாகம் செய்து வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் ஒப்புதல் அளிக்குப்பட்டு, அறிவிக்கப்பட்ட இவரது நியமனத்தின் பதவி காலம் என்பது ஐந்து வருட காலத்திற்கு அல்லது அவர் 65 வயதை எட்டும் வரையில் இருக்கும். இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரையில் சிவசுப்பிரமணியன் ராமன் இப்பதிவியில் இருப்பார்.
யார் இந்த சிவசுப்பிரமணியன் ராமன்..?: 1991-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரியான ராமன், நிதி ஒழுங்குமுறை, பொது நிதி மற்றும் தொழில்நுட்பத்தில் பல வருட அனுபவம் கொண்டவர். PFRDA-வில் சேருவதற்கு முன்பு, இந்தியாவின் கணக்கு மற்றும் தணிக்கை தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் துணைத் தலைமைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றினார்.
அவர் சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும், நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (NeSL) நிர்வாக இயக்குனராகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதன்மை கணக்காளராகவும் (Principal Accountant General) இருந்துள்ளார்.
மேலும் 2006 முதல் 2013 வரை SEBI அமைப்பின் தலைமை பொது மேலாளர் மற்றும் செயல் இயக்குனர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
ராமன் டெல்லி பல்கலைக்கழகத்தில் MBA மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் நிதி ஒழுங்குமுறையில் முதுகலைப் பட்டம், சட்டப்பிரிவில் இளங்கலை பட்டம், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் தலைமை டிஜிட்டல் அதிகாரி சான்றிதழ் மற்றும் புளோரிடாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்னல் ஆடிட்டர்ஸிடமிருந்து சான்றளிக்கப்பட்ட உள் தணிக்கையாளர் சான்றிதழ் ஆகிய கூடுதல் தகுதிகளையும் பெற்றுள்ளார்.
சிவசுப்பிரமணியன் ராமன், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவரது அனுபவம் மற்றும் தகுதிகள், ஓய்வூதியத் துறையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications