வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலோடு, பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா -அமெரிக்கர்கள் 9 பேர் போட்டியில் இருந்தனர். அவர்களின் யாரெல்லாம் வெற்றி பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான இந்திய அமெரிக்கர்கள் போட்டியில் இருந்தனர். இவர்களின் கலிபோர்னியா மாகாணம் இரண்டு இந்திய அமெரிக்கர்களை தேர்வு செய்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பியுள்ளது.

இதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ரோ கண்ணா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரை வீழ்த்தி மீண்டும் எம்பியாக தேர்வாகியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதன் முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். கலிபோர்னியாவின் 17ஆவது மாவட்டம், பாரம்பரியமாகவே ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது.
அந்த வகையில் கலிபோர்னியா மாகாணம் 6ஆவது மாவட்ட தொகுதியில் அமி பெரா வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக இவர் தொடர்ந்து 7ஆவது முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார். இவருக்கு ஜனநாயக கட்சியில் பிரதிநிதிகள் சபையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
சுஹாஸ் சுப்பிரமணியன், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்திய அமெரிக்க இவர். விர்ஜீனியாவின் பத்தாவது மாவட்ட தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் மை பிளான்சியை இவர் தோற்கடித்துள்ளார். இதன் மூலம் விர்ஜீனியாவில் தேர்வாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
மிச்சிகனில் இருந்து போட்டியிட்ட இந்திய அமெரிக்கர் ஸ்ரீ தனேதரும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் குடியரசு கட்சி வேட்பாளர் மார்டல் டிவிங்சை விட 35 சதவீத அதிக வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக இந்த தொகுதியை கைப்பற்றி இருக்கிறார்.
அதேபோல இந்திய அமெரிக்கரான ராஜ கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இவர் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் முதல் முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு இந்திய அமெரிக்கரான 59 வயதாகும் பிரமிளா ஜெயபாலும் வாஷிங்டன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக தேர்தலில் போட்டியிட்ட 9 இந்திய அமெரிக்கர்களில் 6 பேர் இதுவரை வெற்றிபெற்று பிரதிநிதிகள் சபைக்கு செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications