ஈரோடு: எஸ்கேஎம் ஸ்ரீ சிவகுமார் முட்டை பவுடர் உற்பத்தியில் சர்வதேச அளவில் உயர்ந்து நிற்கும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர். 1995 ஆம் ஆண்டில் தன்னுடைய 27வது வயதில் எஸ்கேஎம் ஸ்ரீ சிவகுமார் முட்டையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து அதனை ஏற்றுமதி செய்யும் தொழிலை தொடங்கினார்.
இப்படி ஈரோட்டில் சிறிய நிறுவனமாக தொடங்கியது தான் எஸ்கேஎம் எக் ப்ராடக்ட் எக்ஸ்போர்ட் லிமிடெட்(SKM Egg Products Exports (India) Limited). தற்போது இந்த நிறுவனம் ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய முட்டை ப்ராசஸிங் பிளான்ட் வைத்திருக்கும் நிறுவனமாக எஸ்கேஎம் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இருக்கிறது.

ஒரு நாளைக்கு 1.8 மில்லியன் முட்டைகளை ப்ராசசிங் செய்வதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு இந்த நிறுவனம் 6500 டன்கள் முட்டை பவுடரை தயாரிக்கிறது.
முதலில் இந்த நிறுவனம் 150 பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியது, தற்போது 1300 பேர் இதில் பணி புரிகின்றனர். முழு முட்டை ,வெள்ளை கரு மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகிய மூன்றில் இருந்தும் தனித்தனியாக பவுடர்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர் . அது மட்டும் இன்றி திரவமாக இருக்கும் முட்டை வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை டெட்ரா பேக்குகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர் .
பெரும்பாலும் இவர்கள் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு தங்களுடைய முட்டை சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றனர். கிட்டத்தட்ட 20 நாடுகளில் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் எல்லாம் இவர்களின் முட்டை பவுடர்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்து வருகிறது.
சிவகுமாரின் தந்தை கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விலங்குகளுக்கு தேவையான தீவனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவர் எஸ்கேஎம் அனிமல் பீட்ஸ் என்ற பெயரில் சொந்தமாக ஒரு ஆலையை நிறுவியிருந்தார். இது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. தந்தையின் தொழிலில் சிறு வயது முதலே உதவி செய்து வந்த சிவகுமார் 1991 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பொறியியல் படிப்பை முடித்தவுடன் தந்தையுடன் தொழிலில் இணைந்து கொண்டார்.
அப்பொழுது 1994ஆம் ஆண்டு டிட்கோவுடன் இணைந்து முட்டை பவுடர்களை தயாரிக்கும் ஆலையை நிறுவினார். முதல் கட்டமாக இதற்காக ஆந்திராவில் அமைந்துள்ள ஆலைக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்டவர் ஈரோட்டில் முட்டை பவுடர் தயாரிக்கும் ஆலையை அமைத்தார். முதலில் பெல்ஜியம் நிறுவனத்துடன் இணைந்து முட்டை பவுடர் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப உதவிகளை பெற்றிருக்கிறார்.
இதற்காக கரூர் பகுதியில் சொந்தமாக கோழி பண்ணை செயல்படுத்தி வருகிறார் ஒரு நாளைக்கு இவர்களது கோழிப்பண்ணையிலிருந்து 5 லட்சம் முட்டைகள் தயாராகின்றன இது தவிர கூடுதலாக வெளி வியாபாரிகளிடமிருந்து ஒரு நாளைக்கு 10 லட்சம் முட்டைகளை வாங்கி அவரது ஆலையில் அதனை முட்டை பவுடர்களாகவும் மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.
பன்னீர் வடிவத்தில் முட்டை வெள்ளை கருவை தயாரித்து பாக்கெட்டுகளில் இவரது நிறுவனம் விற்பனை செய்கிறது, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டின் பவுடர்களையும் தயாரிக்கிறது.தன்னுடைய நிறுவனத்தின் வருமானம் 1000கோடியை எட்ட வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என உற்சாகமாக கூறுகிறார் சிவகுமார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications