ஜெர்மனி நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான வோக்ஸ்வாகன் நிறுவனம் தற்போது இந்தியாவில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஜெர்மனியில் வர்த்தக மந்தநிலை, சீன தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி, தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் அமெரிக்க அரசு மெக்சிகோ நாட்டின் மீது விதித்த வரி போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால் இதிலும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
SKODA - வோக்ஸ்வாகன் குரூப் இந்தியாவில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தனது இருப்பை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது. இக்கூட்டணி நிறுவனங்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி சந்தை பங்கை அதிகரிக்கும் நோக்கத்துடன், 2019 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது மூன்று இந்திய துணை நிறுவனங்களான வோக்ஸ்வாகன், ஸ்கோடா மற்றும் ஆடி ஆகியவற்றை ஒன்றிணைத்து ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா லிமிடெட் என்ற ஒற்றை நிறுவனமாக மாற்றியது. இந்த நிறுவனத்திற்கு தான் தற்போது 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான நோட்டீஸ் பறந்துள்ளது.

இந்திய அரசு சமீபத்தில் வோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆடி, வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா வாகனங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களை தவறாக வகைப்படுத்தி, சுமார் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி வரியை ஏய்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுவாக வோக்ஸ்வாகன், ஸ்கோடா மற்றும் ஆடி பிராண்டுகள் தனது கார்களை இந்தியாவில் தயாரிக்காமல் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் இது உள்நாட்டில் அசம்பிள் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய முழுமையாக அசெம்பிள் செய்யப்படாத வாகன பாகங்களை (CKD யூனிட்கள்) இறக்குமதி வரி 30-35% விதிக்கப்படும்.
ஆனால் ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா லிமிடெட் இதை உதிரிபாகங்களாக "individual parts" இறக்குமதி செய்து, குறைந்த இறக்குமதி வரி அதாவது 5-15% செலுத்தி இந்த பொருட்களை கார்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தியுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தவறான வகைப்படுத்தல் மூலம் வரி செலுத்துவதை குறைத்துள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வோக்ஸ்வாகனின் இந்திய பிரிவு சரியான இறக்குமதி வரிகளை செலுத்தாமல் "செயற்கை ஏற்பாடு" மூலம் செயல்பட்டு வருவதாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள நோட்டீஸ் குற்றம் சாட்டுகிறது. இந்திய அதிகாரிகள், 2012 ஆம் ஆண்டு முதல் வோக்ஸ்வாகன் நிறுவனம் 2.35 பில்லியன் டாலர் இறக்குமதி வரி மற்றும் பிற கட்டணங்களை செலுத்தியிருக்க வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளனர். ஆனால், 981 மில்லியன் டாலர் மட்டுமே செலுத்தியுள்ளது. இதன் மூலம் 1.36 பில்லியன் டாலர் ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள, ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா, அனைத்து விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கும் முழுமையாக இணங்குவதற்கு செயல்படுவதாக தெரிவித்துள்ளது. அரசு அனுப்பியுள்ள நோட்டீஸில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை விளக்குவதற்கும், சரி செய்வதற்கும் இந்திய அரசு அதிகாரிகளுடன் நிறுவனம் தொடர்ந்து ஒத்துழைப்பதாகவும், இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வரி விவகாரம் வோக்ஸ்வாகனின் இந்தியா நடவடிக்கைகளுக்கு கடுமையான சவாலாக அமைந்துள்ளது. விசாரணையின் முடிவு நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களிலும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டித்திறனாக செயல்படும் திறனிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
மறுப்புறம் இந்த வழக்கின் காரணமாக துறைமுகத்தில் சுமார் 50 கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது, இதில் ஸ்கோடா, வோக்ஸ்வேகன், ஆடி கார்களுக்கான உதிரிபாகங்கள் உள்ளது. இதனால் ஸ்கோடா இந்தியா பிரிவின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வோக்ஸ்வாகன் நிறுவனம் இந்திய அரசு விதித்த 1.4 பில்லியன் டாலக் வரி நிலுவை தொகை தொடர்பான நோட்டீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "நோட்டீசுக்கு எதிராக சட்டத்தின்படி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, இந்தியாவில் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு கடுமையான சவாலாக அமையும். வழக்கின் தீர்ப்பு நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களிலும், இந்திய தானியங்கி வாகன சந்தையில் போட்டியிடும் திறனிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications