மத்திய அரசு, சாமானிய பொதுமக்கள் முதலீட்டுக்காக அதிகம் பயன்படுத்தும் சிறு சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்களை ஏப்ரல் 1, 2026 முதல் ஜூன் 30, 2026 வரையிலான மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றமும் செய்யாமல் பழைய வட்டி விகிதம் அப்படியே தொடரும் என தெரிவித்துள்ளது. இதனால், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தற்போது பெற்று வரும் அதே வட்டி விகிதத்தையே அடுத்த மூன்று மாதங்களும் தொடர்ந்து பெறுவார்கள்.
இது தொடர்ந்து எட்டாவது முறையாக மாற்றமின்றி அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால், காலாண்டு அடிப்படையில் மாற்றப்படும் இந்த வட்டி விகிதம் இரண்டு ஆண்டுகளாக மாற்றமின்றி தொடர்கிறது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டின் (ஜனவரி-மார்ச் 2026) வட்டி விகிதமே தொடரும் என அறிவித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் முன்பு பெற்று வரும் அதே வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா அதிக வட்டி
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர்கள் அதிகம் சேமிக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா தொடர்ந்து 8.2 சதவீதம் வட்டி வழங்கும். மூன்று ஆண்டு கால நிலையான வைப்பு திட்டம் 7.1 சதவீதம் வட்டியைத் தொடர்ந்து கொடுக்கும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற பிரபலமான திட்டமும் 7.1 சதவீதம் வட்டியிலேயே நீடிக்கும். அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு 4 சதவீதம் வட்டியைத் தொடர்ந்து அளிக்கும்.
மற்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள்
கிசான் விகாஸ் பத்ரா (KVP) 7.5 சதவீதம் வட்டியில் தொடரும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பணம் 115 மாதங்களில் (சுமார் 9 ஆண்டு 7 மாதங்கள்) இரட்டிப்பாகும். தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) 7.7 சதவீதம் வட்டியைத் தொடர்ந்து வழங்கும். ஓய்வூதியர்கள் மத்தியில் பிரபலமான மாத வருமானத் திட்டம் (MIS) 7.4 சதவீதம் வட்டியில் நீடிக்கும்.
இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் எளிதில் பயன்படுத்தக்கூடியவை. குறிப்பாக 2ஆம், 3ஆம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் இந்தத் திட்டங்களை பாதுகாப்பான அரசு உத்தரவாதம் கொண்ட முதலீடாகக் கருதி பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இரண்டு ஆண்டுகளாக வட்டி விகிதங்கள் மாற்றப்படாததால், பணவீக்கம் அதிகரித்தாலும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவில்லை.
கடைசியாக இந்தத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மாற்றப்பட்டன. அதன் பிறகு இப்போது வரை எந்த மாற்றமும் இல்லை. எனவே, இந்தத் திட்டங்கள் பாதுகாப்பானவை என்றாலும், அடுத்த சில மாதங்களில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது என்பதே முக்கியமான விஷயம்.


Click it and Unblock the Notifications