சென்னை: இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் 5ஜி சேவைக்கு மாறி வரும் வேளையில், சந்தையில் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பது டெலிகாம் துறையின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் 5ஜி சேவை துறையில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி செமிகண்டக்டர் சிப். மலிவு விலை போன்களில் பெரும் தொகையை உற்பத்திக்கும், சிப்-க்கும் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் மலிவு விலை சிப் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது ரூ.10,000-க்குள் விற்பனையாகும் சியோமி ரெட்மி 13சி 5ஜி (ரூ.10,499, போகோ எம்6 5ஜி (ரூ.9,499) , லாவா பிளேஸ் 2 5ஜி (ரூ.10,499) போன்றவையே மலிவு 5ஜி ஸ்மார்ட்போன்களாக உள்ளன. இந்தியாவில் ஏற்கனவே 17.5 கோடி 5ஜி பயனர்கள் இருப்பதுடன், மேலும் 80 கோடி 4ஜி மற்றும் பியூச்சர் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பிரிவினரை 5ஜிக்கு அழைத்து வருவது பெரும் திண்டாட்டமாக உள்ளது, இவர்களை ஈர்க்கவே மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உதவும் வகையில் மலிவு விலை செமிகண்டக்டர் சிப்-களை தயாரித்து வருகிறது குவால்கம். இது திட்டமிட்டபடி நடைமுறைக்கு வந்தால் ரூ.8,000-க்குள் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய முடியும், இது கீழ் தட்டு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வர்த்தகத்தை ஈர்க்க உதவும்.
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் 100 டாலர் அல்லது 8000 ரூபாய்க்கு கீழ் 5ஜி ஸ்டமார்ட்போன் இல்லை என்பதால், இந்த கேப்-ஐ நிரப்ப வருகிறது குவால்காம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் தற்போதுள்ள சிப்செட்டுகளிலேயே மிகவும் மலிவானது. இந்த சிப்செட் வெற்றிகரமாக செயல்பட்டால், இந்தியாவில் ரூ.8,000-க்குள் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 4 சீரியல் சிப்-களில் முதல் முறையாக 'எஸ்' வகை சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குவால்காம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் இந்தியாவை தாண்டி உலகின் பிற நாடுகளிலும் இருக்கும் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2.8 பில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் மலிவு விலையில் போன் வாங்கி வேகமான 5ஜி மொபைல் இண்டர்நெட்-ஐ அனுபவிக்க முடியும்.
இந்த நிலையில், சியோமி இந்தியா நிறுவனம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட்டை பயன்படுத்தித் தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடும் என உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து சியோமி இந்தியா தலைவர் முரளி கிருஷ்ணன் கூறுகையில் "பலர் இன்னும் 5ஜியின் நன்மைகளை அனுபவிக்கவில்லை. ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 மூலம் 5ஜி இணைப்பை அதிகமானோருக்கு வழங்க முடியும்" என தெரிவித்துள்ளார். அதேபோல், மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் தங்கள் திட்டங்களை உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications