இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு தேவையான உபகரணங்கள் உற்பத்தியில் மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. மின்னணு சாதன உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா தான் திகழ்ந்து வருகிறது.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகளின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தேவையான உபகரணங்களின் உற்பத்தியும் அதிகரித்தால் அதற்கான விநியோக சங்கிலி சீராக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக மின்னணு சாதன உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.

இதனை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை சேர்ந்த டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கான டிஸ்ப்ளே மாட்யூல்களை உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக சீனாவை சேர்ந்த ஹெச்கேசி (HKC) நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் கூட்டு நிறுவனத்தை அமைக்க டிக்சன் டெக்னாலஜிஸ் திட்டமிட்டு இருக்கிறது. மத்திய அரசின் அனுமதி கோரி டிக்சன் டெக்னாலஜி நிறுவனம் விண்ணப்பம் செய்திருக்கிறது .
இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்திருக்கும் நாடுகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அரசின் நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி செய்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்க முடியும். அந்த வகையில் டிக்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த ஹெச்கேசி நிறுவனத்தோடு கூட்டு நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் செய்திருப்பதால் மத்திய அரசு அந்த விண்ணப்பத்தை கவனத்துடன் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிக்சன் நிறுவனம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விலை கொண்ட மொபைல் போன்கள் ,டேப்லெட் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதை இலக்காக கொண்டு புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த மின்னணு சாதனங்களுக்கு தேவையான டிஸ்ப்ளே மாட்யூல்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனவே அவற்றையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவே டிக்சன் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசின் உற்பத்தி இணைக்கப்பட்ட நிதியுதவி திட்டத்தின் கீழ் டிக்சன் டெக்னாலஜி நிறுவனம் இந்த உற்பத்தி ஆலையை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி பெருகி இருந்தாலும் அதற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அந்த நிலைமையை போக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இந்திய நிறுவனங்கள் மின்னணு சாதனங்களுக்கு தேவையான உபகரணங்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டுகின்றன.
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை தொலைக்காட்சி, ஸ்மார்ட் போன்கள், சிசிடிவி கேமரா ,வாஷிங் மெஷின், எல்இடி பல்பு, உள்ளிட்டவற்றை உலகின் முன்னணி நிறுவனங்களான சாம்சங் ,ரெட் மி, பேனசோனிக் ஆகியவற்றுக்கு உற்பத்தி செய்து வழங்கி வருகிற.து இந்தியாவில் இந்த நிறுவனம் 17 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications