பெங்களூரு: இந்தியாவில் உருவான பிரபல சமூக வலைதளம் ஷேர் சாட் தங்களுடைய ஊழியர்களில் 5 சதவீதம் பேரை குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தான் சமூக வலைத்தளமான ஷேர்சாட் செயல்படுகிறது. இது குறுகிய நேரம் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய ஒரு சமூக வலைத்தளமாகும். இந்த சமூக வலைத்தள நிறுவனம் அண்மையில் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து 16 மில்லியன் டாலர்கள் முதலீட்டினை ஈர்த்துள்ளது. இந்திய ரூபாயில் இது 134 கோடி ஆகும்.
மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையை இந்த நிறுவனம் கணிசமாக குறைத்துள்ளது. நிறுவனத்தின் நிதி நிலைமையை சீராக்க இந்த முடிவினை எடுத்திருப்பதாக ஷேர் சாட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் தான் 49 மில்லியன் டாலர்கள் முதலீடு பெறப்பட்டது.

தற்போது சிங்கப்பூர் செயல்பட்டு வரக்கூடிய முதலீட்டு நிறுவனமான EDBI புதிதாக 16 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த கூடுதல் நிதி, செயலியில் புதிய அம்சங்களை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படும் என ஷேர் சாட் கூறியுள்ளது .
மேலும் கடந்த சில மாதங்களாகவே செயல்பாட்டு அடிப்படையில் லாபகரமான நிறுவனமாக ஷேர் சாட் செயல்பட்டு வருகிறது என இதன் தாய் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் ஷேர் சாட் நிறுவனம் தொடர்ச்சியாக ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்து வருகிறது. கிட்டத்தட்ட மொத்த ஊழியர்களில் இருந்து 5 சதவீதம் பேரை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே வேளையில் புதிதாக வேலைக்கும் ஆட்களை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிறுவனம் சுமார் 15 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்து நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்தது. பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஷேர் சாட் நிறுவனம் கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில் 552.7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.
ஆனால் அந்த ஆண்டில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக இருந்தது. மேலும் 2023-ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் சுமார் 500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது. செயல்திறன் அடிப்படையில் தான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், அது வழக்கமான நடவடிக்கை தான் என்றும் ஷேர் சாட் தரப்பில் விளக்கம் தரப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications