இந்தியாவில் பிற பகுதி மாநிலங்களைக் காட்டிலும் தென்னிந்திய மாநிலங்கள் புதிய நிறுவனங்களையும், புதிய முதலீடுகளையும் ஈர்ப்பதில் மிகவும் ஆர்வமாகவும்,தீவிரமாக உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இதனால் பல துறையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் கொண்ட மாநிலமாக வளர்ச்சி அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் திருப்பூர்-க்குப் போட்டியாகத் தெலுங்கானா அரசு புதிய டெக்ஸ்டைல் பார்க் உருவாக்கியது மட்டும் அல்லாமல் புதிய முதலீட்டையும் பெற்று உள்ளது.
தெலுங்கானா மாநிலம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியில் உருவாக்கப்பட்டு உள்ள காகதியா மெகா டெக்ஸ்டைல் பூங்காவில் (கேஎம்டிபி) டெக்ஸ்டைல் யூனிட்களை அமைப்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்தத் தெலுங்கானா அரசாங்கத்தின் உறுதிமொழி எடுத்துள்ளது.
யங்கோன் கார்ப்பரேஷன்
இதேவேளையில் தென் கொரிய நாட்டின் டெக்ஸ்டைல் நிறுவனமான யங்கோன் கார்ப்பரேஷன் தெலுங்கானா மாநிலத்தில் புதிய டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளை அமைக்கப் பல ஆயிரம் கோடி தொகையை முதலீடு செய்ய உள்ளது.
புதிய தொழிற்சாலை
தென் கொரிய நிறுவனமான யங்கோன் கார்ப்பரேஷன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தனது புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான அடித்தளத்தைக் காகதியா மெகா டெக்ஸ்டைல் பூங்காவில் அமைக்க உள்ளது.
8 தொழிற்சாலைகள்
யங்கோன் கார்ப்பரேஷன் தனது முதல் கட்ட திட்டத்தில் சுமார் ஐந்து தொழிற்சாலைகள் தொடங்க உள்ளது, மேலும் மூன்று தொழிற்சாலைகளை இரண்டாவது கட்டத்தில் வரும் என்று தெலுங்கானா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழகத்தின் (TSIIC) மண்டல மேலாளர் ஆர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.
முக்கியத் தயாரிப்புகள்
யங்கோன் கார்ப்பரேஷன் சிந்தடிக் ஜாக்கெட்டுகள், பூட்ஸ், டிராக் சூட்கள் மற்றும் பிற டிரக்கிங் ஆடைகளின் முன்னணி தயாரிப்பாளராக உள்ளது.
290 ஏக்கர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் யங்கோன் கார்ப்பரேஷன் சுமார் 290 ஏக்கரில் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட வெளிப்புற உடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்கள் தயாரிப்புக்கான knit மற்றும் woven ஆடைகள் உற்பத்தி தளத்தை அமைக்கும் என்று கூறியது.
3000 கோடி ரூபாய் முதலீடு
இந்த அறிவிப்பை தொடர்ந்து யங்கோன் கார்ப்பரேஷன் தற்போது இத்திட்டத்திற்காகச் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஏற்றுமதி தரம் கொண்ட ஆடைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலீடு செய்ய உள்ளது. இதேபோல் யங்கோன் கூடுதலாக 30 ஏக்கர் நிலம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
20000 வேலைவாய்ப்புகள்
யங்கோன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் சுமார் 8 தொழிற்சாலைகள் மூலம் சுமார் 20000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கேரளா Kitex Group
கொரோனா காலத்தில் கேரளாவில் இருந்த Kitex Group சில முக்கியமான பிரச்சனைகள் காரணமாக வெளியேறிய முடிவு செய்த நிலையில் தமிழ்நாட்டை முந்திக்கொண்டு தெலுங்கானா அமைச்சர் KTR நேரடியாகக் களத்தில் இறங்கி சுமார் 2400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை டெக்ஸ்டைல் துறையில் ஈர்த்தது. Kitex Group தொழிற்சாலை-க்கு சுமார் 177 ஏக்கர் நிலத்தைத் தெலுங்கானா அரசு ஒதுக்கியது.


Click it and Unblock the Notifications