சென்னை மக்களின் மிக முக்கியமான ஒரு போக்குவரத்து வழிமுறையாக புறநகர் ரயில் சேவைகள் இருக்கின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படும் ரயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளும், அலுவலகங்களும் செயல்படுகின்றன. எனவே நாள் முழுவதுமே கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் இருக்கும். குறிப்பாக காலை , மாலை என பீக் அவர்களில் அதிக நெரிசல் இருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சார ரயில்களை நம்பி தான் இருக்கின்றனர்.

குறைந்த கட்டணம், மாணவர்களுக்கு பாஸ், போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம் என பல சௌகரியங்களை வழங்குகிறது மின்சார ரயில்கள். வழக்கமாக கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை 204 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் , அது கடந்த வாரம் 160 ஆக குறைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திடீரென ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை காரணமாக கூறி தென்னக ரயில்வே 204 ரயில்களை முதல் கட்டமாக 160 ஆக குறைத்தது. பின்னர் அதனை மேலும் குறித்து 115 ஆக கிட்டத்தட்ட பாதி அளவுக்கு குறைத்து விட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 30 முதல் 40 நிமிட இடைவெளிகளில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன அதுவும் வரும்போதே கூட்டமாக வருகிறது கால் வைக்க கூட இடமில்லை என சாடுகின்றனர்.
தாம்பரம், கிண்டி, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரக்கூடிய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தான் மின்சார ரயில்களின் எண்ணிக்கையை தென்னக ரயில்வே குறைத்துள்ளது. ஆனால் வாக்குறுதி அளித்த படி 20 நிமிடங்களுக்கு ஒரு ரயிலாவது இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் அதுவும் விமான நிலையத்தோடு சரி அங்கிருந்து தாம்பரம் மார்க்கமாக செல்ல வேண்டியவர்கள் பேருந்துகளை தான் நாட வேண்டி இருக்கிறது. தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் இன்னலை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் மார்ச் 2ஆம் தேதிக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியுள்ளார். மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது மார்ச் 2ஆம் தேதிக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது இயக்கப்படும் ரயில்களிலேயே கூடுதல் ரயில் பெட்டிகள் சேர்க்கப்படும், ரயில் இயக்கப்படும் இடைவெளி நேரம் குறைக்கப்படும் என்றும் மார்ச் 30ஆம் தேதிக்குள் எழும்பூர் ரயில் நிலைய பணிகளை முடித்து ரயில் போக்குவரத்தை சீராக முயற்சிக்கப்படும் என உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications