டெல்லி: பொருளாதாரம், தனிநபர் வருமானம், ஜிடிபி பங்களிப்பு உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பங்கு தான் அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கலுக்கு பிறகு தென் மாநிலங்கள் முன்னேறி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை செய்வதாக தெரித்துள்ளது.
தென் மாநிலங்களில் தனிநபர் வருமானம் அதிகரித்து இருப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா ,ஆந்திர பிரதேசம் ,தெலுங்கானா , கேரளா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஜிடிபியில் 30 சதவீத பங்களிக்கின்றன.

ஆனால் மற்ற பிராந்தியங்களில் இருக்கும் மாநிலங்களால் இந்த அளவினை எட்ட முடியவில்லை. குறிப்பாக கிழக்கு மாநிலங்கள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நிலையான பொருளாதார வளர்ச்சியை பெற்று வந்த மேற்கு வங்க மாநிலம் தற்போது அதிலிருந்து பின்னடைவை சந்தித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
1960 - 61 ஆம் ஆண்டு தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் மேற்கு வங்க மாநிலத்தின் பங்கு 10.5 சதவீதமாக இருந்தது. அதுவே தற்போது 5.6 சதவீதம் என பாதி அளவுக்கு குறைந்துவிட்டது. அதேபோல மேற்குவங்க மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியில் 127.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 83.7 சதவீதம் என குறைந்துவிட்டது. இந்த அறிக்கை மேற்குவங்க மாநிலம் தொடர்ச்சியாக தன்னுடைய பொருளாதார வலிமையை இழந்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடலுக்கு அருகிலேயே இருப்பது உள்ளிட்ட புவியியல் ரீதியான அமைப்பு காரணமாக ஆரம்ப கட்டத்தில் பல்வேறு தொழில்கள் நடைபெற்ற மேற்குவங்க மாநிலம் சிறந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்த நிலையில் தற்போது அது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதே வேளையில் கடந்த 10 ஆண்டு காலத்தில் பீகாரின் நிலைமை சீரடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா மாநிலமும் மேம்பட்டு வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபிக்கு அதிக பங்களிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலம் 13.3 சதவீதம் ஜிடிபி பங்களிப்பை கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 150.7 சதவீதம் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களை பொருத்தவரை ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிக தனி நபர் வருமானம் கொண்ட மாநிலங்களாக திகழ்ந்து வருகின்றன.
இந்த அறிக்கை அடிப்படையில் பார்க்கும்போது நாட்டின் மொத்த ஜிடிபியில் அதிக பங்களிப்பு தரும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு 8.9 சதவீத ஜிடிபி பங்களிப்பை தருகிறது. 1991க்கு முன் தென் மாநிலங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டவில்லை, ஆனால் தாராளமயமாக்கலுக்கு பின் இந்த மாநிலங்கள் மிகச் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளன என இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications