பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் உள்ள மீனவர் ஒருவர் ஏராளமான மருத்துவக் குணங்கள் கொண்ட அரிய வகை மீன்களை ஏலம் விட்டு ஒரே நாளில் பல லட்சத்தைச் சம்பாதித்துள்ளார்.
அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மேசமான நிலையில் இருக்கும் வேளையில் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கே போராடும் நிலையில் ஒரு மீனவர் ஒரே இரவில் பல லட்சம் சம்பாதித்த செய்தி காட்டுத்தீ போலப் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.

பாகிஸ்தான் நாட்டின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான இப்ராஹிம் ஹைடேரி (Ibrahim Hyderi) என்ற மீனவ கிராமத்தில் வசிக்கும் ஹாஜி பலூச் மற்றும் அவரது குழு அரபிக்கடலில் இருந்து தங்க மீன் எனச் செல்லமாக அழைக்கப்படும் சோவா எனப்படும் மீன்களைப் பிடித்துள்ளனர்.
கராச்சி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஹாஜி பலூச் மற்றும் அவருடைய குழு பிடித்த மீன்களை ஏலம் விடப்பட்ட போது, சுமார் 70 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகப் பாகிஸ்தான் மீனவர் நாட்டுப்புற மன்றத்தைச் சேர்ந்த முபாரக் கான் தெரிவித்துள்ளார்.
சோவா மீன் விலைமதிப்பற்றதாகவும் அரிதானதாகவும் கருதப்படுகிறது, இதற்கு முக்கியக் காரணம் அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் வலியைச் சிறந்த முறையில் குணப்படுத்தும் தன்மையும், மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தச் சோவா மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் வரும், இதை அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஏலத்தில் ஒரு மீன் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்று ஹாஜி பலூச் கூறினார். பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன் வகை தான் இந்தச் சோவா மீன், இதற்குக் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகப்படியான டிமாணட் உள்ளது .
மேலும் சோவா மீன் கலாச்சார மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது, பாரம்பரிய மருந்துகள் மற்றும் உள்ளூர் உணவுகளிலும் இது பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த மீன் விற்பனையில் கிடைத்த பணத்தைத் தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.


Click it and Unblock the Notifications