விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணத்தில் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளையும், சாதனைகளையும் செய்து வரும் ஒரு தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். இந்நிறுவனம் தொடர்ந்து அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்யப் போதுமான முதலீடுகள் இல்லாத காரணத்தினால் இந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் புதிதாக முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளார்.
அடுத்தடுத்த வெற்றியின் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலையில், எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைக் கடந்த முதலீட்டுச் சுற்று-ஐ விடவும் 2 மடங்கும் அதிக மதிப்பீடு வேண்டும் வலியுறுத்தி வருகிறார்.
92 பில்லியன் டாலர் மதிப்பீடு
ஸ்பேஸ் எக்ஸ் நிர்வாகம் புதிய முதலீட்டை ஈர்க்கும் பேச்சுவார்த்தையில் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்நிறுவனத்தை 92 பில்லியன் டாலருக்கு மதிப்பிட வேண்டும் என விரும்புகிறது எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம். மேலும் இந்த முதலீட்டுச் சுற்றை வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
4 மாதங்களுக்கு முன்
4 மாதங்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சுமார் 45 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 1.9 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டியது. ஆனால் இந்தக் குறுகிய காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மதிப்பை இரட்டிப்புச் செய்து முதலீட்டு திரட்டுவது என்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் சவாலாக விளங்குகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் - நாசா
சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாசா உடன் சேர்ந்து மனிதர்களை விண்வெளியில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேனுக்கு அனுப்பியது. உலகிலேயே முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய சாதனை படைத்தது எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தான்.
2 முக்கியத் திட்டங்கள்
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் உலகம் முழுவதும் செயற்கைக்கோள் வாயிலாக அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கும் ஸ்டார்லிங்க் சேவைக்கும், பெரிய வடிவிலான ராக்கெட்-ஐ விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்கள் அடுத்தடுத்தச் செயல்படுத்த உள்ள நிலையில் இந்நிறுவனத்திற்கான நிதி தேவை மிகவும் அதிகமாக உள்ளது.
ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவை
இதேவேளையில் எலான் மஸ்க்-ன் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவை உலகின் இணையச் சேவையைத் தலைகீழாகப் புரட்டிப்போடக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதேநிலையில் தற்போது அமெரிக்கா, கனடாவில் கருவிகளுக்காக 499 டாலரும் மாதம் 99 டாலர் என்ற கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை அளித்து வருகிறது ஸ்பேஸ் எக்ஸ்.
இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-ன் 92 பில்லியன் டாலர் மதிப்பிலான மதிப்பீட்டை ஏற்று முதலீடு செய்வார்களா..?


Click it and Unblock the Notifications