சென்னை: தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் தான் முக்கிய உணவு ஆதாரமாக இருந்து வருகின்றன .
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர் . பல்வேறு உணவுப் பொருட்களை நியாய விலை கடைகளில் வாங்கி குடும்பம் நடத்தக்கூடிய ஏராளமான குடும்பங்களை நாம் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 33,222 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

ரேஷன் அட்டையை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன . உதாரணமாக மகளிர் உரிமைத்தொகை ,இயற்கை பேரிடர் காலங்களில் வழங்கப்படும் உதவித்தொகை , அரசின் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்துமே ரேஷன் அட்டை அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது.
முக்கியமான ஒரு அடையாள ஆவணமாகவும் நாம் ரேஷன் அட்டையை பயன்படுத்தி வருகிறோம் . ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பது ,திருத்தம் செய்வது, முகவரி மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றுக்கு எல்லாம் மக்கள் எளிமையாக ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்துவிட முடியும். இருந்தாலும் இவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தாலும் பல சமயங்களில் அதிகாரிகள் அந்த விண்ணப்பங்களை நிராகரித்து விடுகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விரும்பும் மக்களுக்காகவே தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் இந்த மாதத்திற்கான ரேஷன் அட்டை திருத்த முகாம் செப்டம்பர் 13 ஆம் தேதியான சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும், புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்க்க வேண்டும் ,பெயரை நீக்க வேண்டும், தொலைபேசி எண் மாற்ற வேண்டும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் மற்றும் நகல் குடும்ப அட்டை காண மனுக்களை வழங்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
ரேஷன் அட்டை வகையை மாற்ற வேண்டும் என்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பம் செய்யலாம், அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இங்கே சென்று ஒரே நாளில் தங்கள் வேலையை முடித்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை மக்கள் தவற விட வேண்டாம் என தமிழ்நாடு பொதுவிநியோகத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய ரேஷன் அட்டை தான் முக்கியமான ஆவணம் என்பதால் இதுவரை ரேஷன் அட்டை இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரேஷன் அட்டை பெற்று மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications