இந்தியாவின் பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனத் தீவிரமாக இருக்கும் அதேவேளையில், பல்வேறு சிக்கல்களை நிர்வாகத்தில் எதிர்கொண்டு வருகிறது. தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் தலைமை வர்த்தக அதிகாரி உட்படக் கமர்சியல் சேவை பிரிவில் பல அதிகாரிகள் அதிரடியாகத் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என இன்று காலை தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தலைமை வணிகத் தலைவர் உட்படக் கமர்சியல் சேவை பிரிவின் பல உறுப்பினர்கள் உடனடியாக நிறுவனத்திலிருந்து விலகியுள்ளனர்" என உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய நிதி திரட்டலின் மூலம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த காலப் பிரச்சனைகளைத் தீர்க்கும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது.
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சேவையில் கூடுதல் விமானங்களை இணைத்து, விரைவாக வளர்ச்சி அடைந்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்க நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வெளியானதைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் 10 சதவீதம் வரை சரிந்து ரூ.54.60 என்ற குறைந்த விலையை எட்டியது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முன்பு நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த வேளையில் நிறுவனம் செலவைக் குறைப்பதற்காகவும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் சுமார் 1,400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வணிகத் தலைவர் ஷில்பா பட்டியா மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அருண் காஷ்யப் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாகவும், மார்ச் 31 அன்று அவர்களது கடைசிப் பணி நாள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷில்பா பட்டியா மற்றும் அருண் காஷ்யப் ஆகியோர் தங்கள் சொந்த charter விமான நிறுவனத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications