டெல்லி: இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் போன்றவை பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவையை முழுமையாக அளிக்க முடியாத அளவுக்கு மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் செவ்வாய்க்கிழமை புதிய பிரச்சனைகள் வந்துள்ளதால் டெல்லி மையமாக வைத்து அளிக்கும் சேவைகள் பாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நிலுமை தொகையைச் செலுத்த இரண்டு நாள் இறுதிக் காலக்கெடு வழங்கியது. இந்த நிலுவைத் தொகையை முறையாகச் செலுத்தாவிடில் டெல்லி விமான நிலையத்தில் இருக்கும் அளிக்கும் சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் நிலுவைத் தொகையைச் செலுத்துவதில் தோல்வியடைந்தால், விமான நிலைய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். இதில் முக்கியமாக ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்கு அனைத்துவிதமான சேவைகளும் மறுக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் சேவை பெற முடியாமல் போகலாம்.
நிதியியல் பிரச்சனை, சட்ட பிரச்சனை மற்றும் குத்தகை பிரச்சினைகள் காரணமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் செயல்பாட்டில் இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைந்துள்ளது. விமானங்கள் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் சேவைகளும் குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாகக் கடந்த வாரம், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மூன்று மாத காலத்திற்கு 150 கேபின் க்ரூ ஊழியர்களுக்குத் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட கேபின் க்ரூ ஊழியர்கள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் தொடர்ந்து பணியில் இருப்பார்கள், இந்த 3 மாத காலத்திற்குச் சுகாதார காப்பீட்டு நலன்களையும் விடுமுறையையும் பெறுவார்கள் என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
விமான போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA, விமான நிறுவனத்தை 'மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பின் கீழ்' வைத்த நிலையில், ஸ்பைஸ்ஜெட்டிற்கான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நிலுவைத் தொகை குறித்த கோரிக்கைகள் வந்துள்ளது.
2022 இல் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, DGCA திடீர் சோதனைகளை நடத்தியது, இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்பட்ட பின்னரே விமான நிறுவனம் செயல்பட அனுமதித்தது. இதுதான் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பிரச்சனைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. 2023 ஆம் ஆண்டில், தொடர்ச்சியான நிதி அழுத்தம் காரணமாக, ஸ்பைஸ்ஜெட் மீண்டும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications