இலங்கை: இலங்கை அரசு அதானி குழுமத்துக்கு வழங்கிய மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துள்ளது. இது அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் தொழில் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை ஆகியவற்றுக்கு புதுப்பிக்கதக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரித்து வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அதானி குழுமம் அங்கே மின்சாரம் விற்பனை செய்வதில் சிக்கலை எதிர் கொண்டது. இந்நிலையில் இலங்கை அரசு திடீரென அதானிக்கு வழங்கிய மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுள்ளது.

இலங்கை அரசுக்கு மின்சாரம் தயாரித்து விற்பனை செய்வதாக கடந்த ஆண்டு அதானி குழுமம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் அப்போது முதலே இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் அரசு திடீரென அந்த ஒப்பந்தத்தை கைவிட்டு இருக்கிறது.
கடந்தாண்டு மே மாதம் அதானி குழுமத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி இலங்கையின் வடமேற்கு பகுதியில் அதானி குழுமம் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரம் தயாரித்து இலங்கை அரசுக்கு ஒரு கிலோ வாட் 0.0826 டாலர்களுக்கு விற்பனை செய்யும் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அதானி குழுமம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளூரை சேர்ந்த நிறுவனங்கள் அதானியை விட குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்க தயாராக இருந்த நிலையில் முறைகேடாக அதிகாரிகள் இதனை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளனர் என சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் அமைந்திருக்கும் அதிபர் அனுரகுமார திசநாயக்கே தலைமையிலான அரசு அதானி குழுமத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு கமிட்டி நிறுவப்பட்டு அந்த கமிட்டி ஆய்வு நடத்தும் என்றும் அதன் பிறகு அதானி குழுமத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதா அல்லது வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதா என்பது முடிவு செய்யப்படும் என இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பகுதியில் 484 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு அதானி குழுமம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த ஒப்பந்தத்தையே இலங்கை அரசு ரத்து செய்து இருக்கிறது. இதன் மூலம் 442 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அதானி குழுமம் இழந்திருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications