இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில், இந்திய அரசு மற்றும் இந்திய நிறுவனங்களும் அதன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அதிகளவில் உதவி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் பெரும் தொகையை முதலீடு செய்து கட்டப்பட்ட மாத்தளை ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனம் நிர்வகிக்கும் ஏலத்தில் வென்றுள்ளது.

இலங்கையின் மாத்தளை ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிப்பதற்கான 30 ஆண்டு ஒப்பந்தத்தை, இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களின் கூட்டணி வென்றுள்ளது. சீனா குத்தகைக்கு எடுத்த ஹம்பன்டோட்டா துறைமுகத்திற்கு அருகே இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
209 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், போதிய விமானச் சேவைகள் இல்லாத காரணத்தால், ஒரு காலத்தில் "உலகின் பயணிகள் இல்லாத விமான நிலையம்" என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், இந்திய-ரஷ்ய கூட்டுத் திட்டம் இது இரண்டாவது ஆகும். இதற்கு முன்பு, வங்கதேசத்தில் உள்ள ரூபூர் அணு உலை திட்டத்தில் ரஷ்யா கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், சில லாஜிஸ்டிக்ஸ் பணிகளிலும் உதவி செய்து வருகிறது.
இலங்கை அமைச்சரவை, ஜனவரி 9 ஆம் தேதி, விமான நிலையத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 5 விருப்ப விண்ணப்பங்கள் வந்தது என இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதில் இந்தியாவின் ஷௌர்ய ஏரோநாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி ஆகியவற்றின் கூட்டணி நிறுவனத்திற்கு நிர்வாக ஒப்பந்தத்தை வழங்க பரிந்துரைக்கப்பட்டது என்று குணவர்தன மேலும் தெரிவித்தார். இந்த பரிந்துரையை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாத்தளை விமான நிலையம், இலங்கையை பத்தாண்டுகள் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஷசே அரசின் முக்கிய கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு முதலே, அதிக இழப்பைச் சந்தித்து வந்த இந்த விமான நிலையத்தை நிர்வகிக்க ஒப்பந்ததாரர்களை இலங்கை அரசு தேடி வந்தது.
சீன வர்த்தக மற்றும் இறக்குமதி வங்கியின் (EXIM Bank) நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்தே குறைவான விமானச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
விமான நிலையத்துடன் தொடர்புடைய கடனை மறுசீரமைப்பு செய்வதற்காக இலங்கை அரசு, EXIM வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு மத்தியில் தான் விமான நிலையத்தை இந்தியா சீனா கூட்டணி வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications